Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
- வி.பி.ஸ்ரீநிவாசன்
ஒரு அலுவலகம். காலை நேரத்தில் சிலர் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது மானேஜர் அங்கு வந்தார். ஆனாலும் யாரும் பயப்படவில்லை. காரணம் மானேஜருக்கு கிரிக்கெட் என்றால் உயிர்.
மானேஜர் மூத்த ஊழியர் நாராயணனிடம் என்ன நாராயணன், ரொம்ப சீரியசா என்ன விஷயம் பேசிண்டிருக்கீங்க? என்று கேட்டார்.
அதற்கு நாராயணன் கிரிக்கெட்டில் சில வீரர்கள் சரியாக ஆடுவதில்லை. அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிண்டிருக்கோம் சார் என்றார்.
அதற்கு மானேஜர் அவர்கள் ஒரு சில போட்டிகளில்தான் சரியாக விளையாடியிருக்க மாட்டார்கள். மற்ற போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் இல்லையா. அதனால் அவர்கள் ஏன் ஓய்வு பெற வேண்டும்? இருந்துவிட்டு போகட்டுமே. உங்களுக்கு என்ன கஷ்டம்? என்றார்.
அதற்கு நாராயணன் முக்கியமான போட்டிகளின் பொழுது சரியாக விளையாடாவிட்டால் நாட்டிற்கே பெரிய நஷ்டம். அவமானமும் கூட என்றார்.
மானேஜர் அப்ப உங்களுடைய முடிவு என்ன? என்று கேட்டார்.
நாராயணனும் ஒரு வீரர் சரியாக விளையாடவில்லையெனில் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்குவதற்கு முன் அவர்களாக விலகிவிடுவது நல்லது என்றார்.
மானேஜர் நாராயணன், இது விளைட்டு துறையில் இருப்பவர்களுக்கு மட்டும்தானா இல்லை எல்லா துறையிலும் இருப்பவர்களுக்குமா? என்று கேட்டார்.
நாராயணன் எல்லா துறையிலும் இருப்பவர்ளுக்கு பொருந்தும் சார் என்றார்.
மானேஜர், நாராயணன், அடுத்த வாரம் நடக்கப்போகிற ஆடிட்டிங்கிற்கு அறிக்கை தயார பண்ணச் சொன்னேனே. பண்ணிட்டீங்களா? என்று கேட்டார்.
அதற்கு நாராயணன், இன்னும் கொஞ்சம் தயார் பண்ணனும். ஓரிரு நாளில் முடிச்சிடுவேன் என்றார்.
மானேஜர் சற்று கோபத்துடன், என்ன, இன்னும் முடிக்கலையா? சொல்லி ஒரு மாதமாகிறது. ஹெட் ஆபீசிலிருந்து போன் மேலே போன் வந்திண்டிருக்கு. நீங்க அடிக்கடி லீவு வேற போடறீங்க என்றார்.
சார் வீட்ல கொஞ்சம் பிரச்சினை. அதான்.. என்று சொல்லி இழுத்தார்.
மேனேஜர் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு கூறினார்.
இங்க பாருங்க நாராயணன். வீட்டுப் பிரச்சினையெல்லாம் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். ஆபீசில் சொல்லாதீங்க. இங்கு வேலைதான் முக்கியம். நானும் கவனிச்சிண்டு வரேன். வர வர வேலையில உங்க கவனம் குறைஞ்சுண்டு வர்றது. நீங்க கிரிக்கட் வீரர்களுக்கு சொன்னீங்களே திறமை குறைஞ்சா கிரிக்கெட் வாரியம் அவங்களை நீக்குவதற்கு பதிலா இவங்களே விலகிடனும்னு. அதுபோல திறமை குறைஞ்ச உங்களை நாங்க நீக்கறதுக்கு முன்னாடி நீங்களே விலகிடறதுதான் நல்லது. சரியா
நாராயணன் திடுக்கிட்டு , சார் என்றார்.
மானேஜர், கிரிக்கெட் வீரர்களை எடுக்கிறதா வேண்டாமா என்று வாரியம் பார்த்துக் கொள்ளட்டும். நீங்க கவலை பட வேண்டாம். இன்று மாலைக்குள் அந்த அறிக்கை என் மேஜையில் இருக்கனும். இல்லைன்னா உங்களை நீக்கறதா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணுவேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
அதைக் கேட்டு அனைவரும் ஆடிப் போய் விட்டனர்.
(வி.பி.சீனிவாசன், அம்பத்தூர், ஒய்வுபெற்ற மத்திய அரசு அலுவலர்)