பார்த்தசாரதி

Su.tha Arivalagan
Nov 19, 2026,03:29 PM IST

- ராஜஸ்ரீ


மாதவனும் நாராயணனும்  நண்பர்கள்.


ஒரு நாள் மாதவன், நாராயணன்  வீட்டிற்கு  வந்தான். நாராயணன்  மாதவனிடம், "இப்பொழுது ஓய்வாக இருக்கிறாயா? அல்லது வேலை ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான்.


அதற்கு மாதவன், "ஓய்வாகத்தான் இருக்கிறேன். என்ன விஷயம்?" என்று கேட்டான்.


நாராயணன், "திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்  கோவிலுக்கு போகலாமா?" என்று கேட்க, மாதவனும் "போகலாமே!" என்றான். இருவரும் உடனே கிளம்பினர். கோவிலுக்குச் சென்று வரிசையில் நின்றனர்.


மாதவன் நாராயணனிடம், "பார்த்தசாரதி என்ற பெயர் எப்படி வந்தது? என்று உனக்குத்  தெரியுமா?" என்று கேட்டான்.  அதற்கு நாராயணன், "என்னடா கேள்வி இது? எல்லோருக்கும் தெரிந்ததுதானே" என்றான்.


மாதவன், "கேட்டதுக்கு பதில் சொல்" என்றான். நாராயணன், "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதப் போரில் பார்த்தன் என்னும் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்து தேரை ஓட்டினார். அதனால் பார்த்தனுக்கு தேரை ஓட்டிய சாரதி என்ற பொருளில்  அவருக்கு பார்த்தசாரதி என்ற பெயர் வந்தது. சரிதானே?" என்றான்.




மாதவன், "இதை  எல்லோரும் கூறுவார்கள். ஆனால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தெரியுமா?" என்று கேட்டான். நாராயணன், "அது என்னடா, வேறு ஒரு காரணம்? நீ ஏதாவது கண்டுபிடிச்சியா?" என்று கேட்டான்.


மாதவன், "இப்பொழுது உன் வீட்டிற்கு ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. நீ என்ன கவனிப்பாய்?" என்று கேட்க, நாராயணனும் "ஆட்டோவில் வருவது யார்? என்று கவனிப்பேன்" என்றான்.


"ஆட்டோவை ஓட்டி வந்தது யார்? என்று கவனிப்பாயா?" என்று கேட்டான் மாதவன்.


"ஆட்டோவை யார் ஓட்டிண்டு  வந்தா நமக்கென்ன? நமக்கு அவரா முக்கியம்? உள்ள உட்கார்ந்திருப்பது யார் என்பதுதானே முக்கியம்" என்றான் நாராயணன்.


மாதவன் கூறினான்.


"ஆக  ஆட்டோவில் வந்தவரைத்தான் நாம்   பார்ப்போமே தவிர, ஆட்டோவை ஓட்டி வந்தவரைப் பார்க்க மாட்டோம். ஆனால் இது மகாபாரதப்போரில் தலைகீழாக நடந்தது."


நாராயணன் ஆவலுடன் "எப்படிடா?" என்று கேட்டான்.


அதற்கு மாதவன், "மகாபாரதப் போரின் பொழுது  தேரில் இருந்த அர்ச்சுனனை யாரும் பார்க்கவில்லை. ஏனெனில் அவன் சாதாரண மனிதன். அவனைப் பார்ப்பதால் பயனில்லை.  ஆனால் தேரை ஓட்டி வந்த சாரதியான பகவான் கிருஷ்ணரைத்தான் பார்த்தார்கள். ஏனெனில் அவரை பார்த்தால் புண்ணியம் கிடைக்கும். 

ஆக   எல்லோரும்   பார்த்த சாரதியானதால் அவர்  'பார்த்தசாரதி' என அழைக்கப்பட்டார்" என்றான்.


அதைக்கேட்ட  நாராயணன்  "சிரித்தவாறு பரவாயில்லயே. இதுவும் நல்ல ஒரு காரணமாக இருக்குதே" என்றான்.

 

(ராஜஸ்ரீ என்கிற  வி.பி.ஸ்ரீநிவாசன் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)