பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

Su.tha Arivalagan
Jun 08, 2026,01:03 PM IST

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் திடீர் திருப்பமாக, அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஒட்டுமொத்தமாக விலகுவதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். 


பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜ.க-வின் முக்கிய முகங்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் கருணேஷின் இந்த திடீர் விலகல் முடிவு அக்கட்சி வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக பா.ஜ.க-வில் நீண்ட நாட்களாகத் தீவிரமாக இயங்கி வந்த ஸ்ரீகாந்த் கருணேஷ், ஊடக விவாதங்களிலும், கட்சியின் கருத்துகளைப் பொதுவெளியில் கொண்டு சேர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தவர். மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அவரது பேச்சையும் இவர் மொழி பெயர்த்து வந்தார். இந்நிலையில், அவர் தற்பொழுது எடுத்துள்ள இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.


பின்னணி என்ன?




கடந்த சில மாதங்களாகவே தமிழக பா.ஜ.க-வுக்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகின்றன. எனினும், ஸ்ரீகாந்த் கருணேஷ் தனது விலகலுக்கான குறிப்பிட்ட மற்றும் தெளிவான காரணங்கள் எதையும் இந்த அறிவிப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கட்சியின் மேலிட முடிவுகளால் ஏற்பட்ட அதிருப்தியா அல்லது தனிப்பட்ட காரணங்களா என்பது குறித்து அவரோ அல்லது பா.ஜ.க தலைமை அமைப்போ இன்னும் விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை.


தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கப் போவதாக பா.ஜ.க தீவிரமாக முயன்று வரும் வேளையில், ஊடகங்களில் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாகப் பேசி வந்த ஒரு மாநில செய்தித் தொடர்பாளர், அடிப்படை உறுப்பினர் பதவியையே துறந்து வெளியேறியிருப்பது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.


ஸ்ரீகாந்த் கருணேஷின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்? அவர் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணையப் போகிறாரா அல்லது அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கப் போகிறாரா அல்லது அண்ணாமலை புதிதாக துவங்கி உள்ள அரசியல் இயக்கத்தில் இணைய போகிறாரா என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.