உண்மையைப் பேசிய நன்னிலா.
- சு.மலர்விழி
நன்னிலா மிகவும் சுறுசுறுப்பான சிறுமி. அவள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மட்டுமின்றி, சுற்றியிருந்த அனைவருக்கும் நன்னிலாவை மிகவும் பிடிக்கும். தெருவில் உள்ள வயதானவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தாள்.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு குழுச் செயல்பாட்டைக் கொடுத்தார். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேசையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வண்ணக் குவளை ஒன்று தவறி கீழே விழுந்து உடைந்தது.
அருகில் இருந்த மாணவர்கள், “இந்தக் குவளையை யார் உடைத்தது?” என்று பேசிக்கொண்டிருந்தனர். யாரும் உண்மையைச் சொல்ல முன்வரவில்லை.
அப்போது நன்னிலா தைரியமாக எழுந்து, “ஆசிரியரே, கவனக்குறைவாக நான்தான் குவளையைத் தட்டிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் கவனமாக இருப்பேன்” என்று கூறினாள்.
ஆசிரியர் நன்னிலாவின் நேர்மையைப் பாராட்டினார். “தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த தவறை மறைக்காமல் உண்மையைச் சொல்வது மிகச் சிறந்த பண்பு” என்று கூறினார்.
நன்னிலாவின் நேர்மையை ஆசிரியரும் நண்பர்களும் பாராட்டினர். அன்று முதல், தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதை மற்ற மாணவர்களும் புரிந்துகொண்டனர்.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)