Short Story: கடைசி பெஞ்ச்!

Su.tha Arivalagan
Oct 29, 2026,11:03 AM IST

- சு. மலர்விழி, மதுரை


ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற 20 வயது இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல், ஒரு தேநீர்க் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.


ஒவ்வொரு நாளும் அந்தக் கடைக்கு ஒரு வயதான மனிதர் வருவார். அவர் எப்போதும் கடையின் கடைசி இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பார். ஒருநாள் அருண் அவரிடம், “ஐயா, இந்த வயதிலும் தினமும் செய்தித்தாள் படிக்கிறீர்களே! அதனால் உங்களுக்கு என்ன பயன்?” என்று கேட்டான்.


அந்த முதியவர் சிரித்துக்கொண்டே, “வயதாகிவிட்டால் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட வேண்டுமா? மனிதன் சுவாசிப்பதை நிறுத்தும் நாளில்தான் கற்றுக்கொள்வதையும் நிறுத்த வேண்டும்!” என்றார்.


அந்த வார்த்தைகள் அருணின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அன்று முதல், கடையில் வேலை முடிந்ததும் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினான். பணவசதி இல்லாததால், நூலகத்திற்குச் சென்று படித்தான். நண்பர்கள் கேலி செய்தபோதும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.




நூலகத்தில் சந்தித்த நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் பயிற்சிக் கல்வியைத் தொடர்ந்து படித்து முடித்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அருண் ஒரு சிறந்த ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினான்.


தான் எதிர்கொண்ட வறுமையால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த அருண், தனது கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக ஓர் இலவச நூலகத்தைத் தொடங்கினான். அந்த நூலகத்தில் கடைசியாக ஓர் இருக்கையை மட்டும் காலியாக வைத்திருந்தான்.


ஒருநாள் நூலகத்திற்கு வந்த ஒரு மாணவன், “ஐயா, இந்த இருக்கையை மட்டும் ஏன் காலியாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.


அருண் புன்னகையுடன், “இன்னும் கற்றுக்கொள்ளத் தொடங்காத ஒருவருக்காக!” என்றான்.


அந்த மாணவன் வியப்புடன் அருணைப் பார்த்தான்.


அருண் தொடர்ந்து, “வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் அமர்ந்து தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல; எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதுதான் முக்கியம். சில நேரங்களில் கடைசி இருக்கையில் அமர்பவர்கள்தான் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பிடிக்கிறார்கள்!” என்றான்.


அந்த வார்த்தைகளைக் கேட்ட மாணவனின் மனதில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.


(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)