ராவணனின் ராமநாமம்
- சுதா திருநாராயணன்
ராவணன் மிகுந்த மனக் கவலையுடன் இருந்தான். போர்க்களத்தில் தம்பி கும்பகர்ணன் மாண்ட செய்தி அவனை உலுக்கி விட்டது.
"மாளிகையில் மலர்ப் படுக்கையில் துயில வேண்டிய நீ மண் தரையில் விழுந்து நீள் துயில் கொண்டாயோ?"
ராவணனின் அரற்றலைக் கேட்டு மந்தோதரி கூறுகிறாள். " சீதையை கவர்ந்து கொண்டு வந்தாய், ராமனிடம் பகை கொண்டு வந்தாய்.
உன் குலத்திற்கே துரோகம் செய்தாய், அதர்மன், பாபி ஆனாயே, உண்மையான சூர வீரனாக இருந்தால், சிவ தனுசில் நாண் ஏற்றி சீதையின் கரம்பிடித்து வந்து இருக்கலாமே.
ஞானவான் நீ , தியானமும் அறிந்தவன் நீ , ஆனால், ஒரு சின்ன கோட்டை உன்னால் தாண்ட முடியவில்லை, ஏமாற்றி சீதையை கவர்ந்து இழுத்து வந்தாய்.
பதிலுரைத்தான் இலங்கை வேந்தன்.
"படிக்காத நிர்மூடமே, அறிவிலியே, என்ன அறிவாய் நீ ? மக்கள் நலனை உள்ளடக்கிய விஷயம் இது ! சீதையை நான் அபகரித்து வரவில்லை என்றால் , இராமனின் விரோதத்தை எப்படி பெறுவேன்?
இலங்கையில் சீதையின் பாத கமலங்கள் பட வேண்டாமா ? என்னோடு சேர்த்து அனைவரும் அவள் தரிசனம் பெற வேண்டாமா ? சாபங்கள் நிறைந்த இந்த உலகியல் வாழ்க்கையில் மைதிலியால் தானே முக்தி,
ராமன் செய்த பேருபகாரம் எனக்கு, ஆசானாகும் பேற்றை எனக்கு அவன் அளித்தான், இலங்கை மக்கள் ராமனை அறிந்தனரே, இதற்கு நானே காரணமானேன் அல்லவா?
தன் தளிர் கரங்களால் சிவலிங்கம் அமைத்து ராமேஸ்வரம் என்னும் புண்ணிய தலத்தை ஏற்படுத்தினான் தசரத மைந்தன். ராமனின் லீலைகள் அற்புதமானவை, ஜனங்களின் ஹிதத்தையே எப்பொழுதும் நேசிப்பவன், துக்கங்களை போக்கி சுகங்களை தருபவன் ,
பதிதர்களையும் வீணர்களையும் புனிதமாக்குபவன், அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவன் , ராமனின் லீலைகள் அதி அற்புதமானது. எவனுடைய இதயத்தில் ராமன் வசிக்கவில்லையோ, அவனுக்கு இந்த பூவுலகில் இடமில்லை.
ராமன் இல்லாமல் ராவணன் இல்லை, 'ரா' என்ற எழுத்து இராமனுக்கும் இராவணனுக்கும் பொது, 'வண்' என்றால் சிறப்பு. அன்பு மந்தோதரியே, 'ரா' இல்லாவிட்டால் ஏது சிறப்பு எனக்கு?
உடலில் பிராணன் இருப்பதுபோல் ,நம் இருவர் மனதிலும் ராமன் குடி கொண்டுள்ளான் , நம் இருவர் பெயரிலும் முதல் எழுத்தைச் சேர்த்தால் ராம என்று தானே வருகிறது?
பிரிய மந்தோதரி ,
இருவரும் சேர்ந்து ராமநாமத்தை ஜபிப்போம், மனப் போராட்டங்களில் இருந்து விடுபடுவோம். பகைமை , துன்பம் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை பெறுவோம்,
ராம நாமமே மனதில் நிறைந்து இருக்கட்டும். இராவணன் சிறந்த சிவபக்தன் என்பதை யாவரும் அறிவர். இது இராவணனின் மற்றொரு பக்கம்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)