வெள்ளிக்கிழமை நவராத்திரி!

Su.tha Arivalagan
Oct 17, 2026,02:46 PM IST

- சுதா திருநாராயணன்


அஞ்சனா பரபரப்பாய் உள்ளே வெளியே என்று அலைந்து கொண்டிருந்தாள். நவராத்திரி விழா களை கட்டிக்கொண்டிருந்தது அவள் வீட்டில். பணிப்பெண்ணை விடுமுறை எடுக்காமல்  வேலைக்கு வரவேண்டும் என உத்தரவு போட்டிருந்தாள் அஞ்சனா. 


பணிப்பெண் விமலா  தினமும் வீட்டை நன்கு பெருக்கி துடைத்து பூஜை பாத்திரங்களை தேய்த்து வைத்து விடுவாள். அஞ்சனா தினம் புதியதாக  அழகாக கோலமிட்டு மனை மீது விளக்குகளை ஏற்றி வைப்பாள். 


நவராத்திரி வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு சிறப்பான கோலமும் நைவேத்தியமும் செய்ய வேண்டும். நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று அம்மா புட்டு தான் செய்வாள். நாமும் இன்று புட்டு செய்து வேறு ஏதாவதும் செய்து விடுவோம் என  தீர்மானித்தாள் அஞ்சனா. ஆனால் இன்னும் விமலாவை காணவில்லையே. 

பாத்திரங்களை துலக்கி அடுப்பு மேடையை சுத்தம் செய்து எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்றால் நேரமாகி விடுமே. விமலா லீவு போட்டு விட்டாளா என்ன? போனும் நாட் ரீச்சபிள் என்கிறது. தவித்துக் கொண்டு முதலில் அடுப்பு மேடையை சுத்தம் செய்யலாம் என்று உள்ளே சென்றாள் அஞ்சனா.




 வாயிலில் அரவம் கேட்டது. வந்துவிட்டாள் விமலா. “மாமியாருக்கு ஒரே ஜுரம் அம்மா. மாத்திரை கொடுத்து கஞ்சி வச்சு கொடுத்துட்டு ஓடியாரேன் அம்மா.” பேசிக்கொண்டே பாத்திரங்களை துலக்க பின் கட்டுக்கு சென்றாள் விமலா. அஞ்சனா நிம்மதி பெருமூச்சு விட்டாள். அதற்குப் பிறகு மள மள என்று வேலைகள் முடிந்து விட்டன. புட்டு பர்பி பயறு சுண்டல்  எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு அப்பாடா என்று நிமிர்ந்தாள் அஞ்சனா.


மாலை கொலு பார்க்க வரப்போகும் பெண்மணிகள் அனைவருக்கும்  பாக்கெட்டுகளில் இனிப்பு சுண்டல் எல்லாவற்றையும் தனித்தனியாக பேக் செய்து எடுத்து வைத்துவிட்டு விமலாவிடம் சொன்னாள் அஞ்சனா.


“நீ வீட்டுக்கு போயி முதல்ல உன் பசங்களை அழைச்சுகிட்டு வா.” 


விமலா தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தாள். இரு பெண் குழந்தைகள்  ஒரு ஆண். பெண் குழந்தைகளிடம் பாவாடை சட்டை இனிப்பு சுண்டல் எல்லாவற்றையும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்து விட்டு பையனுக்கு டிராயர் சட்டை வைத்துக் கொடுத்தாள் அஞ்சனா. மூன்று குழந்தைகளுக்குமே பேனா பென்சில் ரப்பர் அடங்கிய ஜாமெட்ரி பாக்ஸ்.


“ரொம்ப தேங்க்ஸ் அம்மா”  என்றாள் விமலா. “தேங்க்ஸ்லாம் சொல்லக்கூடாது. எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கணும் இந்த மாதிரி. படிப்பு ரொம்ப முக்கியம் விமலா. குழந்தைகளையும் நன்றாக படிக்க வை. உனக்கு புடவை ஜாக்கெட் உன் புருஷனுக்கு வேஷ்டி எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். தாம்பூலம்  வாங்கிக்கோ”,  என்று அவளிடமும் கொடுத்தாள் அஞ்சனா.


குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொலுவை பார்த்துக் கொண்டே இனிப்பை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அஞ்சனாவின் மனதில் ஒரு நிறைவு ஏற்பட்டது.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)