US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

Oct 14, 2026,02:51 PM IST

- சுதா திருநாராயணன்


கலிபோர்னியா வாழ் தமிழர்கள் கொண்டாடும் நவராத்திரி திருவிழா குதூகலமும் கொண்டாட்டங்களும் நிறைந்ததாக இருக்கிறது. 11 படிகள் கட்டி எல்லாவிதமான  பொம்மைகளும் வைத்து  அற்புதமாக கொலு அமைக்கின்றனர். அக்கம் பக்கத்து மனிதர்கள் மட்டுமின்றி தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் தாம்புலம் வாங்கிக் கொள்ள  அழைப்பு விடுக்கிறார்கள். தினசரி லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் முதலியவை நவராத்திரி கொலு வைத்திருப்பவர்களின் இல்லங்களில்  பக்தியுடன் நடக்கின்றன.  


அழைப்பு என்பது ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சேர்த்து  தான்.  நான் என்  மகள் மருமகன் பேத்தி  என்று அனைவருடன் ஒருவரின் இல்லத்திற்கு  கொலு பார்க்க சென்றேன். பெரிய ஹாலில்  கொலு  மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டு  இருந்தது. அனுமார் இராவணனுக்கு எதிரில் தன் வாலை சுருட்டி ஆசனம் செய்து உயரமாக அமர்ந்த பொம்மை மிகவும் அழகாக இருந்தது. 


தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு மைக் தயாராக வைக்கப்பட்டிருந்தது பாட்டு பாடுபவர்களுக்காக. ஒரு விஷயம் இங்கு கூறியே ஆக வேண்டும். இங்கு அமெரிக்காவில் பாட்டுப்பாடும் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் பிரமாதமாக பாடுகின்றனர். கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் வித்வான்கள் பலர் கலிபோர்னியா (bay) பே ஏரியாவில் உள்ளனர். கர்நாடக சங்கீதத்தை சுருதி சுத்தமாகவும் நல்ல ஸ்வரத்தோடும் கற்றுக் கொடுக்கின்றனர். குழந்தைகளும் மிகவும் சிரத்தையோடு கற்றுக் கொள்கின்றனர். 




நாங்கள் நவராத்திரி கொலு பார்க்க சென்ற வீட்டில் ஆறு வயதே ஆன இரண்டு பெண் குழந்தைகள் மிகவும் பிரமாதமாக அருணகிரிநாதரின் திருப்புகழை பாடினர். நோட்டுப் புத்தகத்தையோ மொபைலையோ பார்த்து பாடவில்லை. ஸ்வரங்கள் அந்தக் குழந்தைகளுக்கு மனப்பாடமாக இருந்தன. பின்னர் என் பேத்தியும் தியாகராஜர் கிருதி ஒன்றை மிகவும் நன்றாக பாடினாள்.


நாங்கள் சென்றவுடன் முதலில் சுடச்சுட காப்பி தந்தனர். அதன் பிறகு சாப்பிட வாங்கோ என்று தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு வைக்கப்பட்டிருந்த ஐட்டங்களை பார்த்த உடனேயே எனக்கு வயிறு நிரம்பி விட்டது.  சாம்பார் சாதம், கடலைப்பருப்பு சுண்டல், சப்பாத்தி, வெந்தயக்கீரை சப்பாத்தி, குருமா,  தயிர் சாதம், நெல்லிக்காய் ஊறுகாய், நாலு வகை ஸ்வீட். 


பாதாம் பருப்பு தேங்காய் அரைத்து செய்த கேக், பேசன் லட்டு எனப்படும் கடலை மாவு லட்டு (ஏகப்பட்ட நெய்யுடன்), பைனாப்பிள் கேசரி, பாதாம் அல்வா. அங்கு ஒரு கட்டு கட்டிவிட்டு இன்னொருவர் வீட்டிற்கு சென்றோம். அங்கு பூரி உருளைக்கிழங்கு மசால், குட்டி இட்லி  சாம்பார், ஸ்ரீகண்ட் எனப்படும் மகாராஷ்டிரா ஸ்வீட், சோளம் சுண்டல், சேமியா தயிர் ரைஸ், குல்பி ஐஸ் கிரீம். எதிலுமே வெங்காயமோ பூண்டோ கிடையாது. அருமையான கொலு வைபவம்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்