Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

Su.tha Arivalagan
Sep 18, 2026,10:59 AM IST

- சுதா திருநாராயணன்

 

என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதமான மறக்க முடியாத நிகழ்ச்சி 


காஞ்சி காமகோடி பீடம் மஹா பெரியவா, நடமாடும் தெய்வம்,  ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமியை அறியாதவர் இருக்க முடியாது. நானும் மஹா பெரியவாளின் தீவிரமான பக்தை.


மஹா பெரியவாளின் மகிமையை பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் பலன் அடைந்தவர் பலர். பலரும் தங்கள் மேலான அனுபவங்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். மஹா பெரியவா சித்தி அடைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன பிறகும் அவருடைய அருள் கடாக்ஷம் கிடைக்கப் பெறுபவர்கள் பலர். அந்த வகையில் எனக்கும் அப்படி ஓர் அற்புத அனுபவம் ஏற்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்பு.


சரியாக சொல்லவேண்டும் என்றால் 2.9.22 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்கள் வீட்டிற்கு ஒரு பூனை வரும். பால் ஊற்றினால் சாப்பிட்டுவிட்டு போய்விடும். ஜூன் மாதத்தில் 6 குட்டிகள் போட்டது. ஆனால் ஒரு பெரிய கெடா பூனை வந்து அவற்றை கடித்து குதறி விட்டது எல்லா குட்டிகளும் இறந்து போய்விட்டன. மிகவும் வருத்தமாக இருந்தது. பின்னர் ஒரு மாதத்திலேயே மீண்டும் அதனுடைய வயிறு பெரிதாக ஆகிவிட்டது. பூனையின் கர்ப்ப காலம் எவ்வளவு நாட்கள் என்றெல்லாம் யாருக்குத் தெரியும்? 




சம்பவத்தன்று இந்த பூனை வந்து நிரம்ப ஓலமிட்டுக் கொண்டே இருந்தது. அதாவது அழுவது போல் ஊளை இட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து போன குட்டிகளை நினைத்தா ஓலம் இடுகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பால் வைத்தாலும் சாப்பிடவில்லை. மிகவும்  கத்திக்கொண்டே இருந்தது. எங்கள் வீட்டினுள்ளும் வந்து அலமாரி எல்லாம் நுழைந்து நுழைந்து தேடிப் பார்த்தது. அன்று இரவும் ஒரே கத்தல். மறுநாள் மதியம் வரை இந்த கத்தல் தொடர்ந்தது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதன் முதுகை தடவிக் கொடுத்து "உனக்கு ஒன்றுமில்லை, வயிற்றை வலிக்கிறதா? எல்லாம் சரியாகப் போய்விடும்." என்று இரண்டு மூன்று முறை கூறினேன். அப்படியும் அது ஓயவில்லை. 


அதைத் தூக்கி என் மடியில் வைத்துக் கொண்டு,  "மஹா பெரியவா, இந்த வாயில்லா ஜீவனின் வேதனை எனக்கு தாங்க முடியவில்லை. அதற்கு என்ன வலியாக இருந்தாலும் உடனடியாக சரி செய்து விடுங்கள்." என்று மனமுருக பிரார்த்தித்தேன். என்னே ஆச்சரியம்!! ஸ்விட்ச் போட்டாற்போல் டக்கென்று அதனுடைய கத்தல் நின்றுவிட்டது. அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து பால் சாப்பிட்டது. அதனுடைய வயிறும் அமுங்கி விட்டது. நடமாடும் தெய்வம் இன்றும் நம்மிடையே இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி ஆதாரம் வேண்டும்? 


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)