வாத்தும் நாங்களும்!

Su.tha Arivalagan
Sep 10, 2026,03:48 PM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


2011 ஏப்ரலில்  நடந்த நிகழ்ச்சி இது.  


எங்கள் இரண்டாவது பெண்ணின் முதல் பிரசவத்திற்காக அமெரிக்காவில் உள்ள மின்னஸோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிஸ்  என்ற ஊருக்கு போயிருந்தோம். மினியாபோலிஸ்  ஏரிகளின் நகரம் என்று பெயர் பெற்றது. ஆனால் நாங்கள் சென்றது குளிர்காலத்தில் என்பதால் அனைத்து ஏரிகளும் உறைந்து போயிருந்தன.  பாதையின் இரு பக்கமும் மலைபோல் பனி  குவிந்து கிடக்க அதற்கு நடுவில் தான் காரில் எங்களை அழைத்துச் செல்வார் மருமகன்.  நாங்கள் சென்ற சமயம் வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி. வெளியில் நின்றால் நாமே உறைந்து விடுவோம்.


பேரன் பிறந்த மூன்று மாதங்களில் சிகாகோவிற்கு பயணித்தோம். எங்கள் மருமகன் சிகாகோவில் வேறு வேலையில் சேர்ந்திருந்தார். சிகாகோவில் முதல் ஒரு மாதத்திற்கு  மருமகனின் கம்பெனி, நாங்கள்  ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.  நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் கேண்டில் வுட்.  Candle wood. என் மகளுக்கும் மருமகனுக்கும் மட்டும்தான் சலுகை. நாங்கள் தங்கியிருந்த அறைக்கு கட்டணம் உண்டு. 


நாங்கள் தங்கியிருந்த அறையில் அனைத்து சௌகரியங்களும் இருந்தது. ஒரு சமையலறை பாத்திரங்களுடன், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன்,  இரண்டு பர்னர் கொண்ட எலக்ட்ரிக் அடுப்பு, டிஷ் வாஷர், டிவி, இஸ்திரி பெட்டியுடன் கூடிய டேபிள், அன்லிமிடெட் வைஃபை ஃப்ரீ, இலவசமாக துணிகளை துவைத்துக் கொள்ளலாம் , மிக முக்கியமானது இலவசமாக அன்லிமிடெட் காபி.    




எப்பொழுதுமே காலை வேளைகளில் காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட் என்று காலை உணவு ஃப்ரீ. மதியத்திற்கு நான் எங்கள்  அறையில் நான்கு பேருக்கும் ஆக சேர்த்து சமைத்து  விடுவேன்.  சமைப்பதற்கான மளிகைப் பொருட்களை மருமகன் வாங்கி வருவார்.  


சிகாகோவும் நல்ல குளிர் பிரதேசம் தான். காற்று மிகவும் அதிகமாக அடிக்கும் பிரதேசம்.  சிகாகோவிற்கு விண்டி சிட்டி என்று பெயர். (Windy city)  நாங்கள்  ஏப்ரல் மாதத்தில் சென்றதால்   பனிப்பொழிவு இல்லை.  குளிர் இருந்தது. தடிமனான ஜாக்கெட் அணியும்  கட்டாயம் இருந்தது.  மாலை வேளைகளில் வெளியே நடைப் பயிற்சி செய்வோம்.  ஒரு நாள் மாலை குளிரும் இல்லை காற்றும் அதிகமாக இல்லை. 


நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே ஓர் அழகிய குளம் இருந்தது. அதில் நிறைய வாத்துக்கள் நீந்தி கொண்டிருக்கும். Wild Geese என்ற வாத்துகள். அதற்கு கொக்கு மாதிரி கழுத்து நீளமாக இருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு சிறிய கன்றுக்குட்டி அளவுக்கு உயரமாகவும் இருந்தது. புதராக இருந்த இடத்தில் அவை துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நானும் என் கணவரும் ஆசைப்பட்டோம். 


ஒரு பெரிய வாத்து  புதர் அருகில் நின்று கொண்டிருந்தது. நாங்கள் அருகில் சென்றவுடன் புதருக்குள் மறைந்தது. நாங்களும் உள்ளே நுழைய முயற்சித்தோம். 


வாத்து முதலில்  லேசாக சீறியது. பின்னர் கர்ணகடூரமாக கத்திக்கொண்டே எங்களின் நோக்கி வாயை பிளந்து திறந்து கொண்டே வந்தது. அசல் பாம்பு கொத்த வருவதைப் போலவே இருந்தது. அவ்வளவுதான்,  பின்னங்கால் பிடரியில் பட செத்தேன் பிழைத்தேன் என்று  நானும் கணவரும் ஓடி வந்தோம். திருமணமாகி 30 வருடங்களுக்குப் பிறகு இருவரும் கைகோர்த்து ஓடினோம்.  தமாஷாக இருந்தது.


ஹோட்டலில் இருந்த மற்றவர்கள் பின்னர் கூறினார்கள். அந்த வாத்து நன்றாக கொத்தி விடுமாம். சிறு குழந்தைகளை கொத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுமாம். இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். அதன் பின்னால் போகாதீர்கள் என்று அறிவுரை சொன்னார்கள்.   


இந்த வகை பறவைகள் அந்த மாநில சட்டப்படி பாதுகாக்கப்படுபவை.   அவற்றிற்கு ஊறு விளைவித்தாலோ, அல்லது வேட்டையாடினாலோ  15000 டாலர் அபராதமும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். இந்த போர்டை பிறகு பார்த்தோம்.  சரியான வாத்து மடையர்கள்  நாங்கள் என்று சொல்லி சிரித்துக் கொண்டோம்.  


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)