Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!

Sep 10, 2026,03:25 PM IST

- முனைவர் என்.பத்ரி


அலுவலகத்திலிருந்து திரும்பிய பாபு தன்னுடைய மதிய உணவு டப்பியை  வழக்கமாக சிங்க்கில் வைப்பான். ஆனால், இன்று சிங்குக்கு சற்றுத் தள்ளி வைத்தான். ஏற்கனவே சிங்கில் நிறைய பாத்திரங்கள் இருந்தன.அவன் மனைவி விஜயா அவனை முறைத்துப் பார்த்தாள். அவளின் மனதைப் படித்த பாபு அங்கிருந்து பாதுகாப்பான அறைக்கு விரைந்தான்.


இன்று காலை  அலுவலக உதவியாளர்  சிவா வீட்டிற்குள் போனான் பாபு. சிவா சமையல் பாத்திரங்களை  சுத்தம் செய்து கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. ஓர் அறையில் சிவாவின் வயதான அம்மா படுத்த படுக்கையாக இருந்தாள். ஹாலில் அவனுடைய குழந்தை பள்ளிக்குச் சென்று விட்டதன் அடையாளமாக சில புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.அவனுடைய மனைவி யாரோ ஒருவருடைய வீட்டில் சமையல் வேலைக்கு சென்றிருந்தாள்.


அலுவலகச் சாவியை பெற்றுக் கொண்ட  பாபு அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான். அவன் ஒரு கம்பெனியின் மேலாளர். அன்று ஒரு தபாலை அவசரமாக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியிருந்தது. எனவே,அவன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.வழியில் உள்ள அலுவலக உதவியாளர் சிவா வீட்டிற்கு சென்று  அலுவலகத்தின் சாவியை வாங்கிக் கொண்டான்.




அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அவனுடைய வாழ்க்கைத் துணையாக போன மாதம் வந்து சேர்ந்தாள் விஜயா. இவனுக்காக தன்னுடைய திருச்சி வங்கி வேலையை சென்னைக்கு  மாற்றம் செய்து கொண்டு வந்திருக்கிறாள். பொறுப்பான பதவி. காலை 8 மணிக்கு வேலைக்குச் செல்லும் அவளுக்கு நாள் முழுவதும் வேலை இருக்கும். தனிக் குடும்பம் என்பதால்  வீட்டிலும் துணைக்கு ஆள் இல்லை. 


சென்னைக் கூட அவளுக்கு புதியது. ஆனால் வீட்டில் பாபு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடுவது கிடையாது. வீட்டிற்கு அவன் ஒரே பிள்ளை. எந்த வேலையையும் செய்து பழக்கமில்லை.


போன வாரம் விஜயாவுக்கு நல்ல காய்ச்சல்.அப்போது கூட எல்லா வேலையையும் அவளேதான் செய்தாள்.இப்பொழுது சிவாவை பார்த்த பிறகு இவை எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.


அலுவலகத்தில் சிவாவைப் பார்த்தான் பாபு. ’குறைவான சம்பளம். வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலை. மனைவியின் வேலைகளை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம். இவை எல்லாம் தனக்கு இல்லாமல் போனது ஏன்?’ என்று பாபுவின் மனச்சான்று அவனை  வாட்டியது. 


’விஜயாவுக்கு எப்படி உதவலாம்?’ என்று அவன் மனம் யோசித்தது. அவன் ஏற்கனவே ஒரு முறை,’ஒரு வேலைக்காரியை அமர்த்திக் கொள்ளலாம்’ என்று சொன்னதற்கு, ’வேண்டாம்’ என்றாள் அவள். சென்னையில் புதிய நபர் ஒருவரை வீட்டிற்குள் அனுமதிக்க ஆட்சேபித்தாள்.


இதோ இன்று மாலை பாபு வீட்டிற்கு வந்து விட்டான். அவளும் இப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்திருப்பாள். உள்ளே உடையை மாற்றிக் கொண்டிருந்த அவள் கதவை திறக்க சிறிது நேரமானது பரவாயில்லை. வழக்கமாக அதிக முறை கதவைத் தட்டும் பாபு இன்று அமைதி காத்தான். சிறிது நேரம் நிற்பதால் என்ன நேர்ந்து விடப் போகிறது? அவன்  மனம்,’பொறுமைகாட்டு’ என்றது. 


அலறி அடித்துக்  கொண்டு வந்த புது மனைவி  கதவைத் திறந்தாள்.


உள்ளே வந்த கணவனிடம் ’ஒரு நிமிடம் இருங்கள் காஃபி போட்டுக் கொண்டு வருகிறேன்’ என்று சமையலறைக்குள் போனாள்.


அவளும் வேலை முடிந்து இப்போதுதானே வந்திருக்கிறாள்? பாபுவின் மனம் புலன் விசாரணையைத் தொடங்கியது.அவளைப் பார்க்கவே அவனுக்கு இன்று ஏனோ பரிதாபமாக இருந்தது. 


சமையல் அறைக்குள் அவள் பின்னாலேயே சென்றான். ’இதோ ஒரு நொடியில் காஃபி தயாராகிவிடும்’ என்ற அவசர அவசரமாக அன்பாக சொன்னாள் அவள்.


பாபு தன்னுடைய உடைகளை மாற்றிக்கொள்ள தயாரான பொழுது காஃபியுடன் வந்தாள். கூடவே ஒரு கையில் அந்த உணவு டப்பி.  ’உங்களுக்குத்தான் என் மேல்தான் எவ்வளவு அன்பு?’ என்று அவன் மீது சாய்ந்துக் கொண்டாள். உணவு டப்பியில் இருந்த  மல்லிகை பூ அவன் சொல்ல வந்த சேதியை அவளுக்கு சொல்லியிருக்கிறது.


லுங்கிக்கு மாறிய பாபு சமையல் அறை பாத்திரங்களை சுத்தப்படுத்த தொடங்கினான். அவனுடைய குருநாதர்  சிவாவுக்கு நன்றி சொன்னான்.


’நெஞ்சமெல்லாம் நீயே’ என்று மனைவியைப் பார்த்து சொன்னான். ஆனால்,விஜயாவின் சிரிப்புதான் அடங்க வெகு நேரமானது.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். பல்வேறு இதழ்களில் 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துச் சிறந்த கல்விச் சேவையாளராகப் புகழ்பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாத்தும் நாங்களும்!

news

Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!

news

எளிமையின் முரண்

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்