சமர்ப்பணம்
- சுதா திருநாராயணன், திருச்சி
"ரொம்ப பசிக்குதே" என்றார் சலபதி மனைவி பத்மாவை பார்த்து. "ஏதாவது பால் பழம் இருக்கான்னு பாக்கறேன் "
கூடத்தில் இருந்து வந்த வாசனையை சலபதியின் மூக்கு மோப்பம் பிடித்தது. நாக்கு சப்புக் கொட்டியது.
"அதெல்லாம் பூண்டு வெங்காயம் சேர்த்தது, நமக்கு வேண்டாம்." என்றாள் பத்மா. "சின்ன தட்டுல திராட்சைப்பழம் வச்சு இருக்குமே"
"இன்னிக்கு சாயங்காலம் ஒண்ணுமே வைக்கல."
"காலம்பர என்ன வெச்சா? "
"வாழைப்பழம் மட்டும்தான் "
"ரெண்டு மூணு நாளாவே சரியான சாப்பாடு பண்ணல. ஏதோ விருந்து. நம்மள மறந்துட்டா. நீ எங்க கவனிச்ச உனக்கு ஆயிரம் ஜோலி."
அப்போது கதவு திறந்தது. 5 வயது குழந்தை குமுதா உள்ளே வந்தாள். கையில் பீட்சா. "உம்மாச்சி, இந்தா சாப்பிடு. எது சாப்பிட்டாலும் உம்மாச்சிட்ட சொல்லிட்டு தான் சாப்பிடணும் அப்படின்னு பாட்டி சொல்லி இருக்கா." என்றவாறு குழந்தை கையை நீட்டி வெங்கடாசலபதிக்கும் பத்மாவதி தாயாருக்கும் பீட்சாவை சமர்ப்பித்தாள். பெருமாளும் தாயாரும் புன்னகை புரிந்தனர்.