வாயை மூடு

Su.tha Arivalagan
Sep 15, 2026,11:02 AM IST

- சுதா திருநாராயணன்


அறியாப்பருவத்தில் அன்னையின் ஆணை வாயை மூடு, குழந்தைகளின் லட்சணம் குறைவாக பேசுவது. வளரும் பருவத்தில் தந்தையின் தலையீடு, அதிகமாகப் பேசாதே,  முளைத்து மூன்று இலை விட்ட திமிரா?  ரொம்ப

துளிர்த்து விட்டாயே! !!


துளிர் முளையிலேயே கருகியது .....

ஆனால் மீண்டும் 

மொட்டு மலர்வதைப் போல் மலர்ந்தேன், சிரித்தேன், வாழ்வை ரசித்தேன்


அண்ணன்களின் அதிகாரம்... பேசாதே,

இன்னொருவனின் சொத்து நீ ...

மங்கலநாண் பூட்டிக்கொண்டு மணாளனின் கைப்பிடித்தேன்.


மாமியார் மண்டையில் தட்டினாள் ....

பேசாதே,  இது உன் பிறந்தகம் அல்ல.




இல்லறத்தை நிர்வகித்து,

குடும்பம் என்னும் பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தேன்.

கணவனும் என் கருத்து சுதந்திரத்தை பறித்தான்.

திறக்காதே வாயை,   பெண்ணுக்கு மௌன மொழியே அழகு ...


"அப்போ வாயற்ற ஊமைக்காவது வாழ்வு கொடுத்திருக்கலாமே"

என் மனக்குரல் ஓலமிட்டது.


கட்டுக்கடங்காத செலவை சமாளிக்க,

உடலை வருத்தி உத்யோகத்திற்கும் சென்றேன்.


மேலாளர் மொழிந்தார்.....

வாயை திறக்காமல் வேலை செய்....

இங்கு சுவற்றுக்கும் உண்டு  காதுகள்...

அவற்றின் நாவும் கூர்மையானவை, 


கடன் படாமலிருக்க கடனே என்று பணிபுரிந்தேன் !!

முதல் தேதிகளின் சலவைத் தாள்கள்

ஈந்த மகிழ்ச்சி அலாதியானவை.....

கணவருக்கும் மற்றவர்களுக்கும் !!!! 


முதுமையின் வெண்மைக் கோடுகள் சிரசிலும்,

சுருக்கங்கள் உடலிலும்

சற்றே என்னை எட்டிப்பார்த்தன.


குழந்தைகள் கூவினார்கள் 


'அம்மா!  வாயை மூடு, தற்கால விஷயங்கள் உன்னைப்போன்ற கற்கால மனுஷிக்கு தெரியாது' ..


வாட்ஸ் அப்பும் முகநூலும் 

என் நிம்மதியை  

பறித்தன ....


வயோதிகத்தின் வேதனை வாட்டி எடுத்தது. ....


இப்போது எல்லோருமே கூறினார்கள்....


பேசாமல் இரு உனக்கு  தேவை ஓய்வு.,


என்னுடைய இந்த கட்டாய மௌனத்தின் பின்னால்

சொல்லப்படாத ஆனால் சொல்லவேண்டிய பல எண்ணங்கள் அமுங்கி விட்டன.,


சோடா பாட்டிலை திறப்பது போல்

நான் அவற்றைத் திறந்து வெளியிட்டு 

சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பினேன் ..

என் உள்ளத்தை திறந்து மடை திறந்த வெள்ளம் போல் கொட்ட விரும்பினேன்,


ஆனால் அந்தோ !?


காலன் பாசக்கயிற்றுடன் நின்றான்...

பேசாமல் என்னுடன் வா என்றான்


அவனாவது பாசமெனும் கயிறுடன் வந்தானே என்று 

கடைசியாக வாய்க்கரிசிக்காக திறந்த வாயையும் மூடிக்கொண்டு 

பயணித்தேன் காலனின் பின்னால்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)