பருப்பை போட்டு சாப்பிட்டவன் தான் ருசி சொல்லுவான்.. இன்று என்ன நாள் தெரியுமா!
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
பருப்பு இருந்தால் தான் சோறு மற்றும் பருப்பை போட்டு சாப்பிட்டவன் தான் ருசி சொல்லுவான் என்ற பழமொழிக்கேற்ப பருப்பின் முக்கியத்துவம் அறிந்து கொள்வோம்.
பிப்ரவரி 10 – உலக பருப்புகள் தினம் அதாவது.. இன்று World Pulses Day
மனித வாழ்க்கைக்கு உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். உணவில் சமநிலை, சத்துக்கள் நிறைந்த உணவு இருந்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும். அந்த வகையில் மனித உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள் போன்றவற்றை இயற்கையாக வழங்கும் முக்கிய உணவுப்பொருட்களாக பருப்புகள் விளங்குகின்றன.
இந்த பருப்புகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி உலக பருப்புகள் தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக பருப்புகள் தினம் உருவான வரலாறு
பருப்புகளின் உணவுசார் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உலக அளவில் எடுத்துரைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 2016 ஆம் ஆண்டை சர்வதேச பருப்புகள் ஆண்டு என அறிவித்தது. அந்த ஆண்டு கிடைத்த வரவேற்பையும் மக்களின் விழிப்புணர்வையும் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பிப்ரவரி 10 ஐ உலக பருப்புகள் தினம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் நோக்கம், பருப்புகளை உணவிலும் விவசாயத்திலும் அதிகம் பயன்படுத்த ஊக்குவிப்பதே ஆகும்.
பருப்புகள் என்பது பயறு வகை தாவரங்களில் விளையும் உலர் விதைகளாகும்.
சரி என்னென்ன வகையான பருப்புகள் எல்லாம் இருக்கின்றன.?
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை, பயத்தம் பருப்பு, சோயா பீன்ஸ் இவை அனைத்தும் தாவர ஆதாரப் புரதத்தின் முக்கிய மூலங்கள் ஆகும்.
பருப்புகளின் சத்துணவு முக்கியத்துவம்
1. புரதத்தின் சக்தி - பருப்புகளில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. சைவ உணவினருக்கு இது இறைச்சிக்குச் சமமான உணவாக விளங்குகிறது.
2. நார்ச்சத்து - நார்ச்சத்து நிறைந்ததால், செரிமானம் சீராகும் மலச்சிக்கல் குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்
3. வைட்டமின்கள் & தாதுக்கள் பருப்புகளில் உள்ளன. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம்
இதனால் இரத்தசோகை, எலும்பு பலவீனம் போன்றவை தடுக்கப்படுகின்றன.
பருப்புகளை தினசரி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
இதய நோய்கள் குறையும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் எடை சமநிலையாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால்தான் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் பருப்புகளை அன்றாட உணவில் சேர்க்க அறிவுறுத்துகிறார்கள்.
பருப்புகள் மனித ஆரோக்கியத்திற்கே அல்ல, பூமி பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. மண்ணின் வளத்தை அதிகரிக்கும்.
நைட்ரஜன் சக்தியை மண்ணில் சேர்க்கும். குறைந்த நீரிலேயே வளரக்கூடிய பயிர். கார்பன் வெளியீட்டை குறைக்கும்.
இதனால் பருப்புகள் நிலைத்த விவசாயத்தின் அடையாளமாக விளங்குகின்றன.
உலக நாடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப, உணவுப் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் குறைந்த செலவில் அதிக சத்துணவு நீண்ட காலம் சேமிக்கக்கூடிய தன்மை எல்லா காலநிலைக்கும் ஏற்ற பயிர் என்பதால் பருப்புகள் உணவுப் பாதுகாப்பின் அடித்தளமாக திகழ்கின்றன.
இந்திய பாரம்பரியம் உணவுப் பழக்கங்களில் பருப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. சாம்பார், ரசம், கூட்டு,வடை, சுண்டல் என எண்ணற்ற உணவுகள் பருப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழர் சமையலில் பருப்பு இல்லாத உணவு அரிது என்பதே உண்மை.
பருப்புகளின் பயன்பாட்டை அதிகரிக்க குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க விவசாயிகளை ஊக்குவிக்க இயற்கை விவசாயத்தை வளர்க்க நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய என்னும் நோக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிப்ரவரி 10 – உலக பருப்புகள் தினம், சாதாரண ஒரு நினைவு நாள் அல்ல. இது மனித ஆரோக்கியத்தையும், விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கும் விழிப்புணர்வு நாளாகும்.
பருப்புகளை நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாற்றும்போது, நமது உடல்நலம் மட்டுமல்ல; உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்படும். பருப்புகளைப் பயிரிடுவோம் . ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம். பூமியை காப்போம் என்பதே இந்த நாளின் உண்மையான விழிப்புணர்வு ஆகும்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)