உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம்.. World Understanding and Peace Day!

Su.tha Arivalagan
Feb 23, 2026,02:54 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed, B.A (Hindi)


பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் எல்லா சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அடுத்தவர்களின் மனதை புரிந்து கொண்டு அமைதியாக  வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.


இப்படி சிறப்பான வாழ்க்கையை வாழ இன்றைய தினத்தை கொண்டாடுவோம். என்ன தினம் என்று தினமும் கேள்வி கேட்கிறார்களே? என்று தோன்றுகிறதா?


ஏன்? எதற்கு?எப்படி? என்று வினாக்களை கேட்டு நமது அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு தானே என்பதில் மகிழ்ச்சி அடைவோம்.


உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம் (World Understanding and Peace Day) பிப்ரவரி 23 




உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் வாழ்கிறார்கள். இந்த வேறுபாடுகள் மனித சமூகத்தின் செழிப்பை காட்டுகின்றன. ஆனால், புரிதல் இல்லாமல் போனால் அதுவே மோதல்களுக்கும் பிரிவினைகளுக்கும் வழிவகுக்கும். இதனைத் தடுக்கும் நோக்கில் “உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம்” அனுசரிக்கப்படுகிறது.


இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

மனிதர்களுக்கிடையே புரிதலை வளர்த்தலும், உலக அமைதியை நிலைநாட்டலும் இந்நாளின் முக்கிய குறிக்கோளாகும்.


உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம் முதன்முதலில் Rotary International அமைப்பால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று Paul Harris அவர்களால் தொடங்கப்பட்டது.


Rotary International அமைப்பு உலகம் முழுவதும் சேவைச் செயல்களில் ஈடுபட்டு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் சிறந்த பணிகளை செய்து வருகிறது. அந்த அமைப்பின் தொடக்க நாளையே “World Understanding and Peace Day” ஆக அறிவித்து, உலக அமைதிக்கான விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள்.


மொழி, மத, இன வேறுபாடுகளை கடக்க உலகில் ஆயிரக்கணக்கான மொழிகளும், நூற்றுக்கணக்கான மதங்களும் உள்ளன. ஒவ்வொரு சமூகமும் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. புரிதல் இல்லாத இடத்தில் வெறுப்பும், வன்முறையும் ஏற்படுகிறது.


சர்வதேச ஒற்றுமை நாடுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கின்றன. வர்த்தகம், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 


போர் மற்றும் பயங்கரவாதம் உலக வளர்ச்சியைத் தடை செய்கின்றன. புரிதல் வளர்ந்தால் அமைதி நிலைநாட்ட முடியும். அமைதி என்பது சண்டையின்மை மட்டுமல்ல.அது மனித மனநிலையின் சமநிலையாகும்.


அமைதியாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியது


குடும்பத்தில் ஒற்றுமை இருந்தால் சமூகம் வளரும் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது வீட்டில் உள்ள உறுப்பினர்களுடன் நாம் சண்டை இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் . வீடுகளில் பெற்றோர்கள் சண்டை இல்லாமல் அமைதியாக பேசிக் கொண்டால் அதை பார்த்து குழந்தைகளும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள்.


இன்றைய குழந்தைகளை நாளைய தலைமுறைகள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ நாம் அவர்களுக்கு  முன் உதாரணமாக இருக்க வேண்டும்.


நாம் குடும்பத்தில் அமைதியாக இருந்தால் நமது தெருவிலும், நமது ஊரிலும்  மற்றவர்களிடம் நாம் எதற்கும் கோபப்படாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அமைதியாக வாழும் வாழ்க்கையை வாழ முடியும்.


நாம் இப்படி வாழும் பொழுது நாடுகளுக்கிடையே நல்லுறவு நிலைநிறுத்துதல் தானாகவே காணப்படும். 

நம் நாட்டில் போர் காரணத்தினால் எத்தனை போர்வீரர்கள் மரணமடைகிறார்கள். இந்த நிலையை தவிர்க்க நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும்.


அமைதி எங்கு இருக்கிறதோ அங்கு வளர்ச்சி இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.


இன்றைய நாளில் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அமைதியாக வாழ்ந்து காட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக வாழ்ந்தால் நம் நாட்டில் நீதிமன்றத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும்.  நாம் சண்டை போடுவதால் தான் பல வீடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதும், சொத்து தகராறினால் கொலை செய்வதும் ஏற்படுகிறது.


விட்டுக்கொடுத்தோர் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அனைவரும் விட்டுக்கொடுத்து அமைதியான வாழ்க்கையை வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை இந்நாளில் நாம் அனைவரும் நினைவு கூர்ந்து பார்ப்போம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)