சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!

Su.tha Arivalagan
Dec 09, 2025,09:50 AM IST

- அ.சீ. லாவண்யா


சென்னை: புரதச் சத்தில் சிறந்தது சுண்டல் என்றால் விவாதமே இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்னாக்ஸும் இதுதான்.


என்னாது சுண்டலா

என்று  கிண்டலாக கேட்காதீர்கள் பாஸ்.. அதை விட பெஸ்ட் புரத உணவு வேறு எதுவும் கிடையாது. 



கொண்டைக் கடலை, பச்சை பயறு, காராமணி... எந்த சுண்டலாக இருந்தாலும் புரதம் புஷ்கலம். முழு நாளும் சுறுசுறுப்பை அளிக்கிறது. பசி உணர்வை குறைக்கும், ஜீரணத்தை மேம்படுத்தும். எடை குறைப்பிலும் உதவுகிறது. எளிதாக ஜீரணமும் ஆகும்.


சுண்டலில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெதுவான ஜீரணம் காரணமாக, இரத்த சர்க்கரை அளவையும் இது கட்டுக்குள் வைக்க உதவும். கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடிய தன்மையும் சுண்டலுக்கு உண்டு. இதன் மூலம், கொழுப்பு அளவை குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க உதவுகிறது.


மிகவும் நிறைந்த இரும்புச் சத்து இதில் உள்ளதால், பெரும்பாலும் பெண்களுக்கு இது மிகவும் உகந்த ஆரோக்கிய உணவாகும். எலும்புக்குத் தேவையான வலிமையையும் இது கொடுக்கும். கால்சியம், மக்னீஷியம், பல சத்துக்கள் நிறைந்ததால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரேக்டைமில் சாப்பிட சிறந்தது இந்த சுண்டல். பள்ளி விட்டு வந்தவுடன் குழந்தைகளின் பசியை போக்குவதற்கும் ஒரு சிறந்த ஸ்னாக்ஸ். கண்ட கண்ட திண்பண்டங்களை வாங்கி தராமல் சுண்டல் போன்ற ஆரோக்கியமான ஊட்டசத்து நிரம்பிய உணவு பொருள்களை செய்து தாருங்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)