விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
சென்னை : கடந்த வாரம் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பு வரை, தாங்கள் தான் வெற்றி பெறுவோம். தவெக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பை கிடையாது. முதலில் விஜய் வெற்றி பெறுகிறாரா என்று பாருங்கள் என சொன்ன அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இன்று விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கி உள்ளனர்.
கடந்த வாரம் வரை, அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது அதிமுக.,வா? திமுக.,வா? என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. இருந்தாலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் தவெக பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றி பழம்பெரும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், பேரிடியாகவும் அமைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் வரை விஜய்யையும், தவெக.,வை கடுமையாக விமர்சித்து வந்த பிரபலங்கள் அனைவரும் தற்போது தங்களின் பேச்சுக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், நேற்று வரை சம்பிரதாயத்திற்காக விஜய்க்கும், தவெக.,விற்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரிய பிறகும் இதுவரை ஆளுநவர் அவரை அழைக்கவில்லை. "யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களை தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும்" என திட்டவட்டமாக சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கவர்னரின் கருத்து படி பார்த்தால் தவெக உள்ளிட்ட யாராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை தான் தற்போது வரை உள்ளது.
அரசியல் நகர்வுகள் ஒரு பக்கம் இருந்தால் தவெக ஆட்சி அமைப்பதில் இருக்கும் சிக்கல் விவகாரத்தில் கட்சி வேற்றுமைகளை மறந்து அனைத்து கட்சி தலைவர்களும் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யை முதல்வராக விடாமல் ஆளுநர் தடுப்பது சரியல்ல என கூறி வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர் வரை பலரும் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து விட்டு, பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவங்களா இப்படி பேசுறாங்க என ஆச்சரியப்படும் அளவிற்கு விஜய்க்கு எதிராக பேசியவர்கள் கூட இன்று விஜய்க்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க துவங்கி விட்டனர்.
அரசியல் தலைவர்களின் இந்த மாற்றத்திற்கு விஜய் மீதான பாசம், மக்கள் தீர்ப்பை மதிப்பதா என்று கேட்டால் கண்டிப்பாக இரண்டுமே கிடையாது. இதை காரணமாக வைத்து பாஜக மீதான தங்களின் கோபத்தை, தங்களின் ஆதங்கங்களை கொட்டுவதற்கான வாய்ப்பாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக மறைமுகமாக ஆளுநர் மூலமாக விஜய் முதல்வர் ஆவதை தடுப்பதாக கூறி, ஒட்டுமொத்த மக்களின் கோபத்தையும் பாஜக பக்கம் திருப்புவதற்கான வாய்ப்பாக அரசியல் கட்சியினர் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே பார்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் சொல்லாது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.