போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Su.tha Arivalagan
Oct 13, 2025,11:24 AM IST

டெல்லி : கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களைத் தாக்கல் செய்ததாக கூறப்படுவோர் அதை தாங்ள் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருப்பதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இது பெரும் மோசடி என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து இதுதொடர்பாக தனியாக விசாரிப்பதாகவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


கரூர் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்ட 2 மனுக்கள் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதே விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களை கரூர் சம்பவத்தில் மகனை இழந்த பன்னீர் செல்வம், மனைவியை இழந்த பிரபாகரன், மனைவியை இழந்த செல்வராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.




இந்த நிலையில் இந்த மனுக்களைத் தாங்கள் தாக்கல் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களின் கூற்று நேற்று வெளியானது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறஞர் அபிஷேக் சிங்வி இதுகுறித்து இன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம்  எடுத்துரைத்தார். மோசடியாக மனு தாக்கல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


இதையடுத்து இதுகுறித்து தனியாக விசாரிப்பதாகவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என்றும் தமிழ்நாடு அரசு  வழக்கறிஞர் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தனர்.