ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?

Su.tha Arivalagan
Oct 08, 2026,01:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏன்? புரட்டாசி மாத  மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.


பராபவ வருடம் 2026 அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சனிக்கிழமை புரட்டாசி மாதம்   23 ஆம் தேதி  புரட்டாசி அமாவாசை( மஹாளய அமாவாசை ) அனுஷ்டிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை மஹாலய பக்ஷ காலமாகும். "மஹாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி. 


வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், ஹரிச்சந்திரன், நளன்,  பகவான் ராமர், தர்மர் ஆகியோர்  மஹாளயம்  செய்து பெரும் பேறு பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் இந்த உலகிற்கு வந்து வாழ முக்கியமான காரணமாக இருக்கும் நம் முன்னோர்களை மறவாமல் அவர்களுக்கு நன்றி செலுத்தும் தினம் இந்த' மஹாளய அமாவாசை' ஆகும்.


மஹாளய அமாவாசை சிறப்புகள் :


நம் சந்ததிகளுக்கு ஆசிர்வாதம் :

 

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மிகவும் உகந்த நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. பித்ருபட்ச காலத்தில் விடுபட்ட திதிகளுக்கு இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. இந்த நாள் முன்னோர்களை வணங்குவதனால்  நம் சந்ததிகளுக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.




ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள் வருகின்றது இருப்பினும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய பட்ச அமாவாசை, தைமாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவைகளாக கருதப்படுகிறது.


வழக்கமாக வரும் அமாவாசைகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.


சாபம் நீங்கும்:


இந்த மஹாளய பட்ச அமாவாசை காலகட்டம் எந்தவிதமான பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. நம் வீட்டில் வாழ்ந்த பெரியவர்களுக்கு, நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடம் மிகவும் முக்கியமானது. ஓடுகின்ற நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது ஆகும். எனவே, ஆற்றங்கரை அல்லது கடற்கரை இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து தர்ப்பணம் செய்வது சிறப்பு.


தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் அவரவர் குடும்ப வழக்கத்திற்கு  ஏற்ப வஸ்தரம் மற்றும் காய்கறிகள் சமைத்து படையல் படைத்து வீடுகளில் பூஜை செய்வது சிறப்பு.


நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.