எதை எதையோ தேடி ஓடும் மனிதா.. நின்று நிதானித்து இதைப் படி!
- டி. கலைமணி
வாழ்க்கை என்பது நாம் வாழும் நாட்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, அந்த நாட்களை நாம் எவ்வளவு அர்த்தமுள்ளதாக மாற்றுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. இயந்திரத்தனமான இன்றைய உலகில், மனிதன் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால், உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் அவனது எண்ணங்களிலும், அவன் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்களிலுமே ஒளிந்துள்ளன.
வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகவும், மன நிறைவுடனும் கடக்க உதவும் சில பொன்னான வாழ்வியல் தத்துவங்களை இங்கு பார்ப்போம்.
உன்னதமான தெய்வம்: உலகில் பல கோடி தெய்வங்கள் இருக்கலாம்; ஆனால் மனிதன் பயந்து வாழ வேண்டிய ஒரே உன்னத தெய்வம் அவனது மனசாட்சி மட்டுமே.
மதிப்பில்லா செல்வம்: பொன், பொருளை விட மதிப்புமிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், இதை எவராலும் உங்களுக்குக் கடனாகத் தர முடியாது; நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டியது.
கவலையற்ற வாழ்வின் மூன்று சூத்திரங்கள்: மகிழ்ச்சியாக வாழ ஆயிரம் வழிகள் இருக்கலாம், ஆனால் கவலையின்றி வாழ இந்த மூன்று நிலைகளே அடிப்படை:
போவது போகட்டும்.
வருவது வரட்டும்.
நடப்பது நடக்கட்டும்.
சுயசார்பு மகிழ்ச்சி: உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே; அப்படித் தேடினால் உன் நிம்மதியை நீயே தொலைத்துவிடுவாய்.
கவனமும் சாதனையுயும்: உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்தினால், புதுப்புது சாதனைகள் பிறக்கும். அடுத்தவர் வேலையில் நீங்கள் கவனம் செலுத்தினால், புதுப்புது வேதனைகளே மிஞ்சும்.
பார்வைதான் வாழ்க்கை: எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்கத் தெரியாது. எல்லாவற்றையும் ரசிப்பவர்களுக்கு எதிலும் குறை தெரியாது.
மாறாத குணம்: சந்தனம் துண்டு துண்டாக உடைந்தாலும் அதன் மணம் மாறுவதில்லை. அதுபோலவே, மேன்மையான மனிதர்களின் குணம் வறுமை வந்தாலும் மாறுவதில்லை.
உறவுகளின் ரகசியம்:
விட்டுக்கொடுங்கள் - விருப்பங்கள் நிறைவேறும்.
மன்னியுங்கள் - தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் - அன்பு அதிகமாகும்.
வெற்றிக்கான யுத்தி: தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுத்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும். தெளிவு, நம்பிக்கை, விடாமுயற்சி - இவை மூன்றும் இருந்தால் போதும்.
நம்பிக்கை கொள்: யாராவது உங்களைத் தூக்கிப் போட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கிப் போய்விடாதீர்கள். உங்களுக்கான நாள் விரைவில் வரும்; அப்போது உங்கள் வெற்றி பேசும்.
வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்ததல்ல; அதை நாம் அணுகும் விதத்தில்தான் சிக்கல்கள் உருவாகின்றன. தெளிவான மனசாட்சி, அடுத்தவர் மீதான அக்கறை, எதையும் ரசிக்கும் பண்பு மற்றும் தளராத விடாமுயற்சி ஆகியவற்றை ஒருவன் தன் ஆயுதங்களாகக் கொண்டால், எந்தச் சூழலிலும் அவன் வீழ்வதில்லை.
மேலே குறிப்பிட்ட தத்துவங்களை வெறும் வாசிப்போடு நிறுத்தாமல், வாழ்வியலோடு இணைத்துக் கொண்டால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வசந்தமாகவே அமையும். மாற்றத்தை நமக்குள் இருந்து தொடங்குவோம்; வாழ்க்கை வசப்படும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், தன்னம்பிக்கைக் கதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)