Tueseday Morning Kitchen: வாழைப்பூ கூட்டு.. சாப்பிடலாம் வாங்க!!
- டி. கலைமணி
வாழை மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே உணவுதான். வாழையின் மகத்துவமும் நமக்குத் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று வாழைப்பூ கூட்டு குறித்து பார்க்கப் போகிறோம்.
தேவையானவை
வாழைப்பூ — 1
து. பருப்பு (துவரம் பருப்பு) — 100 கிராம்
வெங்காயம் — 2
தக்காளி — 2
பூண்டு — 5 பல்
தே. துருவல் (தேங்காய் துருவல்) — 3 டீஸ்பூன்
உப்பு — தே. அளவு (தேவையான அளவு)
ப. மிளகாய் (பச்சை மிளகாய்) — 2
சோம்பு — 1 டீஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
சீரகம் — 1 டீஸ்பூன்
உ. பருப்பு (உளுத்தம் பருப்பு) — 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை — சிறிது
கொத்தமல்லி — சிறிது
மிளகாய்த்தூள் — 2 டீஸ்பூன்
ம. தூள் (மஞ்சள் தூள்) — ½ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் — 1 டீஸ்பூன்
க. எண்ணெய் (கடலை எண்ணெய் / சமையல் எண்ணெய்) — தேவையான அளவு
செய்முறை
1. வாழைப்பூவின் இதழ்களை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சிறிய பூக்களின் நடுவில் இருக்கும் தடிமனான நரம்பு மற்றும் அதன் நுனியில் இருக்கும் சிறிய தோல் போன்ற பகுதியை நீக்க வேண்டும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. துவரம் பருப்பை குழைய வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் நன்றாக வதக்கி, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய், கடுகு, சோம்பு, உ.பருப்பு, சீரகம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்கியதும், மிளகாய்த்தூள், ம.தூள், பொடியாக நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும்.
பிறகு வேகவைத்த து.பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கெட்டியாக வந்ததும் அரைத்து வைத்த கலவையைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். வாழைப்பூ கூட்டு ரெடி.
சாப்பிடலாம் வாங்க!
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம், பல்சுவை பாடல்கள், கவிதைகள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)