இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

Su.tha Arivalagan
Feb 03, 2026,11:49 AM IST

- டி. கலைமணி


உலகப் படைப்பில் எதுவுமே முழுமையானது இல்லை, அதே சமயம் எதுவுமே தேவையற்றதும் இல்லை. இயற்கையின் இந்த விசித்திரமான சமநிலையை விளக்கும் அற்புதத் தத்துவம் இது.


வாடாமல்லி.. நீண்ட காலம் வாடாமல் இருக்கும் வரம் பெற்றது. ஆனால், ஒரு மலருக்குரிய அடிப்படைத் தகுதியான மணம் அதனிடம் இல்லை.


வாச மல்லிகை.. அதன் நறுமணம் ஊரைக் கூட்டும். ஆனால், ஒரு நாள் பொழுதிலேயே அது வாடி உதிர்ந்துவிடும்.


வாழ்வு நீளமாக இருப்பதை விட, வாசம் வீசுவதாக இருப்பதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.


மானுக்கு அதன் கொம்புகள் அழகு, ஆனால் அதன் இதயம் அச்சம் நிறைந்தது. வீரத்தோடு போரிடும் குணம் அதனிடம் இல்லை.




கீரி மிக மூர்க்கமாக தன்னை விடப் பெரிய பாம்பையே எதிர்க்கும் வீரம் உண்டு. ஆனால், அதற்கு கம்பீரமான கொம்புகள் இல்லை.


குயில் & மயில் பார்க்க கேட்க அத்தனை அழகு..  குயிலின் நிறம் கருமை, ஆனால் குரல் இனிமை. மயிலின் தோகை அழகு, ஆனால் அதன் குரல் கரகரப்பானது.


வெளித்தோற்றமும், உள்ளிருக்கும் திறமையும் எப்போதும் ஒரே இடத்தில் குடியிருப்பதில்லை.


தாகம் தீர்க்கும் நீருக்கு சுயமான நிறம் கிடையாது. ஒளி தரும் நெருப்புக்கு குளிர்விக்கும் ஈரம் கிடையாது. உயிரைக் காக்கும் காற்றுக்கு கண்ணால் காணும் உருவம் கிடையாது. உலகை இயக்கும் கதிரவனுக்கு தன் காலடியில் ஒதுங்க நிழல் கிடையாது.


வாழ்க்கை ஒரு முழுமையற்ற வட்டம்.. இறைவன் ஒருவனுக்கு அழகைக் கொடுத்தால் அறிவைக் குறைப்பான்; அறிவைக் கொடுத்தால் செல்வத்தைக் குறைப்பான்; செல்வம் கொடுத்தால் நிம்மதியைக் குறைப்பான்.


எல்லாவற்றையும் ஒருவனுக்கே கொடுத்துவிட்டால், மனிதன் தன்னைத் தெய்வமாக நினைத்து விடுவான். உன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடித்தான் நீ ஓட வேண்டும் என்பதே இயற்கையின் விதி.


உன்னிடம் இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட ஒரு கூட்டம் இருக்கும்போது, உன்னிடம் இல்லாததை நினைத்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?


எவர் வாழ்விலும் முழுமையான நிறைவு என்பது கிடையாது, அதே சமயம் எவர் வாழ்விலும் வெறும் குறை மட்டுமே இருக்காது. இந்தப் பிரபஞ்சம் ஈடுகட்டலால் ஆனது. புரிந்து கொள் மனிதனே...!! கிடைத்ததை ஏற்றுக்கொள், கிடைக்காததை விட்டுவிடு.. காரணம் அது உனக்கானது அல்ல.. மனதில் அமைதி கொள்!