நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
- தி.மீரா, ஈரோடு
நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளையும் பத்து பகல்களையும் கொண்ட, அன்னையாகிய சக்தியை வழிபடும் முக்கியமான இந்துத் திருவிழாவாகும். இது தீமையை அழித்து நன்மை வென்றதைக் கொண்டாடும் பண்டிகையாகக் கருதப்படுகிறது.
மகிஷாசூர வதம்
நவராத்திரியின் முக்கிய வரலாறு மகிஷாசூரன் என்ற அரக்கனைத் துர்கா தேவி வென்ற கதையுடன் தொடர்புடையது.
மகிஷாசூரன் எருமை உருவம் கொண்ட அரக்கன். அவன் பிரம்மனைக் குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, "தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது; நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் மட்டுமே இருக்க வேண்டும்" என்ற வரத்தைப் பெற்றான்.
இந்த வரத்தின் காரணமாக மகிஷாசூரன் மூன்று உலகங்களையும் (பூமி, சொர்க்கம், நரகம்) தாக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தேவர்களைக் காக்க அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு பூமியில் பிறந்தாள். ஒன்பது நாட்கள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றாள்.
ஒவ்வொரு தெய்வமும் அம்பிகைக்கு வெவ்வேறு ஆயுதங்களை அளித்தனர். 15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி மகிஷாசூரனைத் திரிசூலத்தால் வதம் செய்தாள்.
இன்னொரு கதையின்படி, அசுரர்களான சும்பன் மற்றும் நிசும்பன் ஆகியோர் கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு மேல் தவம் இருந்து பிரம்மனிடம் "தங்களை யாரும் அழிக்கக்கூடாது" என்ற வரத்தைக் கேட்டனர். துர்கா தேவி 9 நாட்களும் 9 அவதாரங்களை எடுத்து 9 நாட்கள் போரிட்டு அவர்களை வென்றாள்.
ஒன்பது நாட்களின் சிறப்பு
நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் சக்தியின் ஒவ்வொரு வடிவத்தை முதன்மைப்படுத்தி வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் சக்திகளின் வழிபாடான நவராத்திரியை 9 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
நாள் 1-3: துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்கள்
நாள் 4-6: லட்சுமி தேவியின் வழிபாடு
நாள் 7-9: சரஸ்வதி தேவியின் வழிபாடு
நாள் 10: விஜயதசமி (தசரா) - மகிஷாசூரன் மீது துர்கா தேவியின் வெற்றியைக் கொண்டாடும் நாள்
தமிழ்நாட்டில் நவராத்திரி ஒரு பிரதான பண்டிகையாகும். தென் மாநிலங்களில் கொலு அமைத்து நவராத்திரியைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சிகரமான திருவிழாவாகக் கருதப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நவராத்திரியின் நிறைவாகப் பத்தாவது நாளில் விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசூரன் மீது துர்கா தேவியின் வெற்றியை இந்நாள் குறிக்கிறது. இது தீமையை அழித்து நன்மை வென்றதைக் கொண்டாடும் பண்டிகையாகும்.
விஜயதசமி நாளின் சிறப்பு
விஜயதசமி என்பது "வெற்றி பெற்ற பத்தாவது நாள்" என்று பொருள்படும். "விஜயம்" என்றால் வெற்றி, "தசமி" என்றால் பத்தாவது நாள். நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாளாக இது கொண்டாடப்படுகிறது.
விஜயம் = வெற்றி
தசமி = பத்தாவது நாள் (இந்து நாட்காட்டியில் பிரதமை, துதியை, திருதியை... எனப் பத்தாவது நாள் தசமி எனப்படும்)
எனவே விஜயதசமி என்றால் "வெற்றித் திருநாள்" அல்லது "வெற்றி பெற்ற பத்தாவது நாள்" என்று பொருள்.
மகிஷாசூர வதம்
பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போரிட்டு, ஒன்பதாம் நாள் நவமியில் வதம் செய்து, பத்தாம் நாள் வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமி.
பாண்டவர்களின் ஆயுத மீட்பு
மகாபாரதக் கதையின்படி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும், 1 ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) முடித்து, விஜயதசமி நாளில்தான் தங்கள் ஆயுதங்களை மீட்டுக் கொண்டனர்.
பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில், தங்கள் ஆயுதங்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் அடியிலுள்ள பொந்தினுள் ஒளித்து வைத்திருந்தனர். அஞ்ஞான வாசத்தின் போது வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களுக்கு, விஜயதசமி அன்றுதான் பூஜை போட்டு மீட்டுக் கொண்டனர்.
பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அசோக மாமன்னர் கலிங்கத்தை வென்ற பத்தாவது நாள்தான் விஜயதசமி எனவும் வரலாறு கூறுகிறது.
விஜயதசமி நாளில்தான் மராட்டிய மன்னர் வீர சிவாஜி, ஹிந்து தர்மத்தைக் காக்க அன்னை பவானி தேவியை வணங்கி உறுதி எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும் பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
கல்வித் தொடக்கம் (அட்சர அப்யாசம்) - விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். இதனை 'அட்சர அப்யாசம்' என்பர். மழலைக் குழந்தைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை இந்நாளில் ஆரம்பிப்பார்கள்.
புதிய முயற்சிகள்
இந்த நாளில் எந்தவொரு புதிய முயற்சிகளைத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை.
படிப்பு மட்டுமில்லாமல் புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எல்லாமே இன்று தொடங்கினால் எளிதில் வெற்றி பெறலாம்.
விஜயதசமி அன்று துவங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியைக் கொடுக்கும். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும். இந்நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னி மரத்திற்குச் சிறப்பு பூஜை நடக்கும்.
விஜயதசமி என்பது தீமை மீது நன்மை வென்றதைக் கொண்டாடும், புதிய காரியங்களைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும்.