ஆச்சரியம் ஆனால் உண்மை

Su.tha Arivalagan
Mar 02, 2026,10:50 AM IST

- தி. மீரா


கண்ணன் மீரா தம்பதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது. சுவாதி என்று பெயர் வைத்தார்கள். சுவாதி சிறு வயதிலேயே மிகவும் நன்கு திருத்தமாக பேசினாள். சமத்தாக வளர்ந்தாள். இப்படியே எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்தாள்.


படிக்க பள்ளி அனுப்பினார்கள்.ஆசிரியர்களும் அவளது பேச்சை ரசித்தார்கள்.அவளும் அவளது பேச்சுத் திறமையால் போட்டிகளில் கலந்து நல்ல திறமையை வெளிகாட்டி பரிசுகள் வாங்கினாள்.பேச்சுக்கலை அவளிடம் நன்கு வளர்ந்தது. உச்சரிப்பும் குரலும் முக பாவனையும் மிக நன்கு இருந்தது. அவளது பள்ளிக்கு  ஒரு மாணவி சேர்ந்தாள். அவள் பெயர் சுனிதா. அவளுக்கு திக்கு வாய்.அதாவது அவள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் ஒன்றை சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் நன்கு எழுதுவாள். நல்லா படிப்பாள். 


இந்தக் குறை சரி செய்ய இயலவில்லை. ஆனால் மிக நல்ல பெண் குழந்தை. சுவாதியின் பேச்சுத் திறமையை எல்லோரும் பாராட்டுவது அவள் பேசுவது இதையெல்லாம் சுனிதா கவனித்துக் கொண்டே யிருந்தாள். ஒரு நாள் சுனிதா கணக்கு நோட்டை மறந்து வீட்டில் வைத்து விட்டாள். அன்று கணக்கு ஆசிரியை அந்த ஆசிரியை டிரெயினிங்காக வந்த ஆசிரியர். ஒவ்வொருவரின் நோட்டாக பார்த்துக் கொண்டே வந்தார்கள். சுனிதாவிடம் கேட்ட பொழுது அவள் பதில் சொல்ல நேரம் ஆனது.




ஆசிரியர் பயந்துதான் தப்பை மறைக்க பதில் சொல்லவில்லை போலும் என்று நினைத்து மிரட்டி பிறகு அடிக்கப் போய் விட்டார். சுவாதி பார்த்துக் கொண்டேயிருந்தவள் தைரியமாக ஆசிரியரிடம்  சொல்லி புரிய வைத்தாள். அதிலிருந்து சுவாதி சுனிதா நட்பு வளர்ந்தது. தினமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாதி சுனிதாவுக்கு பேச்சு தொடரந்து வருவதற்காக சில பயிற்சிகள் வாசிப்புகள் எல்லாம் கொடுத்து வந்தாள். ஆனாலும் சுனிதாவுக்கு அவ்வளவு தூரம் பயிற்சிகள் உதவவில்லை. முடிந்தவரை செய்யலாம் என்று சுவாதி செய்தாள்.


சுனிதாவுக்கு தான் சரளமாக பேச முடியாவிட்டாலும் சுவாதி போட்டிகளில் பேசுவது உடல் அசைவுகள் எல்லாவற்றையும் ரசிப்பாள். அவள் மாதிரி கைகள் அசைத்து கம்பீரமாக பேசுவது மாதிரி செய்து பார்ப்பாள். வீட்டில் கண்ணாடிக்கு முன் பேசி பார்ப்பாள். நாட்கள் நகர்ந்தன. இரண்டு வருடம் படித்தாள் இந்தப் பள்ளியில் சுனிதா.அவளது அப்பாவுக்கு மாற்றலாகி விட்டது.வேறு ஊருக்குப் போய் விட்டார்கள்.


சுவாதி சுனிதா இருவருக்கும் மிகவும் மனது கஷ்டமாகிவிட்டது. சுனிதா மனதை தேற்றிக் கொண்டு அடுத்த ஊரின் பள்ளியில் சேர்ந்தாள்.இங்குள்ள மாணவிகள் சுனிதா பேசுவதை கேலி செய்தார்கள். கிண்டலடித்தார்கள். பள்ளிக்கு போக மாட்டேன் என்றாள். அப்பொழுது சுவாதியிடம் போன் பேசச் சொல்லி சுனிதா அம்மா கொடுத்தார்கள். அவள் பேச்சில் சிறிது ஆறுதலடைந்தாள். சுவாதி சொன்னாள். நான் சொல்வதை நம்பு. நீ எல்லோரையும் போல் பேசுவாய். கவலைப்படாதே.


நீ முதலில் நம்ப வேண்டும். என் பேச்சை ரசிக்கிறாயே என்னால் முடியவில்லை எனக்கு வராது என்று நினைக்காமல் பயிற்சி முயற்சி செய்து வா. கேலி செய்வதைக் கண்டு கொள்ளாதே. பள்ளிக்கு போ என்றாள். சுனிதாவும் சரி என்று போனாள். மருத்துவரிடமும் கொண்டு காண்பித்தார்கள். ஆனாலும் சரியாவதாக தெரியவில்லை. அப்பொழுதுதான் இதுவரை நம்மால் தொடர்ந்து எல்லோர் மாதிரி பேச முடியும் சுவாதி பேச்சுகள் மேடை பேச்சுகள் எல்வாவற்றையும் அடிக்கடி போட்டு போட்டு பார்த்தாள். தானே சுவாதியாக மாறி பேசுவதாக மாறி பேசுவது போல் தினமும் அவளது அறையில் அதேக் கற்பனையோடு பேசிப் பார்த்தாள். தொடர்ந்து நடந்து வந்தது. நன்கு முயற்சி செய்து கொண்டே வந்தாள்.


இவர்கள் பள்ளியில் பேச்சுப் போட்டி வந்தது. இவள் பெயர் கொடுத்தாள். ஆசிரியர்கள் மாணவிகளுக்கு மிக ஆச்சரியம். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மாணவிகள் சிலர் கேலி செய்தனர். அந்த நாளும் வந்தது. சுனிதா மேடை ஏறினாள் தன்னம்பிக்கையுடன். தன்னை முழுவதுமாக சுவாதியாகவே நினைத்து அப்படியே பேச ஆரம்பித்தாள். அவளுக்கே ஆச்சரியம் அவளை அறியாமல் வார்த்தைகள் முகபாவனைகள் குரல் உச்சரிப்பு எல்லாம் சுவாதி மாதிரியே இருந்தது. தொடர்ந்து 10 நிமிடங்கள் பேசி உட்கார்ந்தாள். அவளுக்கே அவள் நம்பிக்கையின் மேல் பெருமை வந்தது. இதற்கு முன் தன்னால் முடியாது நமக்கு வராது என்ற எண்ணம் கொஞ்சம் இருந்தது.


இல்லை நான் சுவாதி மாதிரி பேச முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் வந்தாள். பேசினாள். பலத்த கரவொலி. சுவாதிக்கு செய்தியை சொன்னாள். அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தக் காணொலியை போட்டுப் பார்த்தாள். அசந்து போனாள். ஆச்சரியம் ஆனால் உண்மை. ஒவ்வொரு சிறு அசைவும் சொற்களும் அப்படியே சுவாதியை பிரதிபலித்தது. சுனிதாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தெரிவித்தாள். அவளது பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. சுனிதா போன்ற பெண்கள் சோர்ந்து போகக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்விற்கு அவசியம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)