சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Su.tha Arivalagan
Sep 26, 2026,03:15 PM IST

சென்னை:தமிழ் திரைப்படத் துறை நவீனமயமாக்கலை நோக்கி அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளது. இனி திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி பெற அரசுத் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அந்த நடைமுறைகள் அனைத்தும் விரைவில் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திரைப்படத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 


நேரில் வந்து காத்திருக்கத் தேவையில்லை :




கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: "திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி பெற தயாரிப்பாளர்களும், படக்குழுவினரும் தலைமைச் செயலகத்திற்கோ அல்லது பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்கோ வந்து மணிக்கணக்கில் காத்து நிற்கும் நிலை இனி இருக்கக்கூடாது. இதற்காக படப்பிடிப்பு அனுமதி வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.திரைப்படப் படப்பிடிப்பு தொடர்பான முழு விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணையதளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்து அனுமதி கோரும் பட்சத்தில், தானியங்கி முறையில் (Automated System) உடனடியாக அனுமதி கிடைக்கும் வகையில் புதிய ஆன்லைன் நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.   


தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி :

தற்போது சினிமா படப்பிடிப்புகள் நடத்த காவல்துறை, மாநகராட்சி, வனத்துறை, தீயணைப்புத் துறை என பல்வேறு அரசுத் துறைகளிடம் தனித்தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இதனால் கால விரயமும், பண விரயமும் ஏற்பட்டு வருவதாகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.அமைச்சரின் இந்த புதிய ஆன்லைன் அனுமதி அறிவிப்பு, தயாரிப்பாளர்களின் பணிப் சுமையையும், படப்பிடிப்பிற்கான தயாரிப்பு நேரத்தையும் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தானியங்கி நடைமுறை மூலம் விண்ணப்பங்களின் நிலை குறித்து தயாரிப்பாளர்கள் நேரடியாகவே அறிந்துகொள்ள முடியும்.


அமைச்சரின் இந்த நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களும், திரைத்துறையினரும் தங்கள் பலத்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், படப்பிடிப்புகளை எளிய முறையில் நடத்துவதற்காகவும் அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை, தமிழ் திரைத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.