மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

Sep 26, 2026,02:57 PM IST

மதுரை:மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்தடை விவகாரம் குறித்து பலரும் தவெக அரசை குற்றம்சாட்டி வரும் நிலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது சலசலப்பை இன்னும் அதிகரித்துள்ளது.


மதுரை அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.விழாவின் போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அரங்கத்தில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் விழா அரங்கில் சில நொடிகள் பரபரப்பு நிலவியது.




இருப்பினும், அடுத்த சில நொடிகளிலேயே மின்சாரம் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பியது. மின்சாரம் மீண்டும் வந்ததும், புன்னகையுடன் “கரண்ட் வந்துடுச்சு..” என்று கூறிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தனது பேச்சைத் தடையின்றித் தொடர்ந்து ஆற்றினார். மின்சாரத் துறை அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போதே நடைபெற்ற இந்த மின்தடை சம்பவம், அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.   


அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்:

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "பட்டமளிப்பு விழா ஆரம்பம் முதலே ஜெனரேட்டர் மூலமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவின் போது ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு இணைப்பை மாற்றியதன் காரணமாகவே 5 வினாடிகள் மட்டும் மின்தடை ஏற்பட்டது. இது மின்சார வாரியத்தின் மின் விநியோகக் குறைபாடு அல்ல, மாறாக ஜெனரேட்டர் மாற்றத்தின் போது ஏற்பட்ட மிகச் சிறிய காலதாமதமே ஆகும்" என்று தெளிவுபடுத்தினார். இந்த விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், சட்டத்துறை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். சலசலப்புக்கு நடுவே, பட்டமளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்