சென்னை: தமிழகத்தின் நிர்வாக மையமான தலைமைச் செயலகத்தை மாற்றியமைக்கும் நோக்கில், சென்னை பல்லவன் இல்ல வளாகத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடங்களை அமைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நாள் திட்டம் மற்றும் இடமாற்றம்:
தற்போது சென்னையில் இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், தற்போதைய தலைமை செயலகம் அமைந்துள்ள இடம் ராணுவத்திற்கு சொந்தமான இடம் என்பதாலும் புதிய மற்றும் நவீன தலைமைச் செயலகத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. முன்னதாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. இருப்பினும், பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த எதிர்ப்பு காரணமாக, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்லவன் இல்லத்தில் புதிய திட்டம்:
பட்டினப்பாக்கம் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சென்னையில் அமைந்துள்ள போக்குவரத்துக் கழகத்தின் 'பல்லவன் இல்லம்' வளாகத்தில் புதிய நிர்வாகக் கட்டிடங்களைக் கட்டுவது குறித்து அரசு தற்போது கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின்படி, சட்டப்பேரவையைத் தவிர்த்து, பிற அரசுத் துறைகளின் முக்கிய நிர்வாகக் அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிடங்களை பல்லவன் இல்ல வளாகத்திலேயே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ள பல்லவன் இல்லம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். பல்லவன் இல்லம் மட்டுமின்றி இதற்கு அருகிலேயே இருக்கும் தீவுத்திடலும் தலைமை செயலகம் கட்டுவதற்கான இடங்களின் பரிசீலனை பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தற்போது வரை பொருட்காட்சி, புத்தகத் திருவிழாக்கள், அதிகமான மக்கள் கூடும் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே தீவுத்தடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை:
தலைமைச் செயலகத்தின் பிற முக்கிய நிர்வாக அலுவலகங்கள் பல்லவன் இல்லத்திற்கு மாற்றப்பட்டாலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் கூட்டத்தொடர்கள் வழக்கம் போல் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டப்பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளம் பாதுகாக்கப்படும். சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள பல்லவன் இல்லம், போக்குவரத்து வசதிகளுக்கும் பொதுமக்களின் வருகைக்கும் மிகவும் ஏதுவாக இருக்கும் என்பதால், இந்த முடிவை அரசு விரைந்து இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகக்கூடும்.
கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!
காஞ்சியின் பேரொளியே!
என் அன்பு அப்பாவிற்கு...!
சிறுகதை: செல்லம் என் குழந்தை
சிந்தனைச் சிதறல்.. உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில்!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
Short story: யசோதா
ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
{{comments.comment}}