மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

Su.tha Arivalagan
May 18, 2026,01:35 PM IST

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 20ம் தேதி காலை 09.30 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று அறிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மே 20ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாளை மறுநாள், அதாவது மே 20, 2026 அன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசு இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.


ஜூன் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: 




கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி, கோடை விடுமுறைக்குப் பின்பு வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இருப்பினும், சிறிய வகுப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக, ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியுள்ளார்.


1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

பள்ளிக் கல்வித்துறையில் தர மேம்பாட்டின் ஒரு பகுதியாக, 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். இந்த புதிய பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.


திரையுலக கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள் ஒருபுறமிருக்க, தலைமைச் செயலகத்தில் இன்று மற்றொரு முக்கிய நிகழ்வாகத் திரையுலக நலன் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் சங்கத்தினர், நடிகர் கமல்ஹாசன், விக்கிரமன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தனர்.  திரைத்துறையினரின் இந்த கோரிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன், அமைச்சர் ராஜ்மோகன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் திரையுலகினரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.