மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

Su.tha Arivalagan
Jun 19, 2026,12:27 PM IST

சென்னை: மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியதும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த விவரம்:


காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.


கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.




காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.


கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.


கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்தத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.