சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

Jun 18, 2026,12:26 PM IST

சென்னை: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரு மொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை உள்ளடக்கிய அறிக்கையை இன்று சட்டசபையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் படித்தார்.


ஆளுநர் ஆர்லேகர் வாசித்த அறிக்கையின் முழுவிவரம்:


“மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் எஜமானர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினேழாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் இங்கே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது முதற்கண் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


2. ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் திகழ்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாமன்றத்தின் உறுப்பினர்களாகிய தாங்கள் அனைவரும் மக்களுக்குத் தேவையானவற்றை விவாதித்து, அதற்கேற்ப சட்டங்களை இயற்றி, மக்கள் நலனைக் காப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


3. "சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்ததே உண்மையான ஜனநாயகம்" என்றார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அத்தகைய ஜனநாயகம் மலர வேண்டுமென்றால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகக் கொண்டுள்ள, சாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டுச் செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் தான் முடியும் என்று முடிவெடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசினை ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அமர்த்தியுள்ளார்கள்.




4. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு மாற்றம் அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டு இருக்கிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், மக்களின் பேராதரவுடன், தன்னந்தனியாக, பல தடைக்கற்களை உடைத்தெறிந்து, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி, ஆட்சியைக் பிடித்திருக்கிறார் சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.



5. “மறுமலர்ச்சி என்பது மாண்புகளை மாய்த்திடும் நஞ்சு அல்ல. மாண்புகளை மாய்க்கும் நச்சுப் பூச்சிகளை அழித்திடும் முறை” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு புதிய மறுமலர்ச்சியை, மகத்தான மாபெரும் விசில் புரட்சியை குறுகிய காலத்தில் ஏற்படுத்தி இமாலய சாதனை புரிந்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.


6. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டின் அரசியலில் 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களும், 1977 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டில் மாபெரும் சரித்திரப் புரட்சியைத் தன்னந்தனியாக ஏற்படுத்தி இருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.


7. மாநில உரிமை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூகநீதி, சம வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், உரிய பிரதிநிதித்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டங்களை இயற்றும் அரசாக, திட்டங்களை தீட்டும் அரசாக, ஏழரைக் கோடி தமிழ்நாட்டு மக்களுக்கான அரசாக இந்த அரசு விளங்கும்.


8. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாகத் திகழும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், ராணி வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைகளைக் கட்டிக் காத்து, பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது வழியில் ஜனநாயகத்தின் மேன்மையை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நடைமுறைப்படுத்தும்.

9. கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாகத் திகழும் இந்த அரசு, கடந்த எழுபத்து நான்கு ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதைச் செய்து காட்டியுள்ளது.


10. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புது தில்லியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கையான வான்வழி அமைப்பு மையத்தை (CABS) ஓசூரின் அருகில் நிறுவவும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயல்வதைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதைத் தடுத்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனே விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து, தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.


11. மேலும், ஒன்றிய அரசிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்குத் தேவையான நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவுதல் மற்றும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்குதல் குறித்தும் கோரினார். நிதி ஆயோக்கின் 11 வது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


12. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினைச் சட்டரீதியாகப் பெறுவதற்காகச் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.


13. தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மாநில உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், மாநிலங்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி, பெரும் முனைப்புடன் இந்த அரசு செயல்படும்.


14. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிக மோசமான சீர்கேட்டைச் சந்தித்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில் உறுதியளித்தபடி, கடந்த கால அரசின் தவறான நிதி நிர்வாகத்தின் மறைக்கப்பட்ட உண்மை நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடனின் அளவு ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்து, 10 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. இது தற்போது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளது.


15. 2024-25 ஆம் நிதியாண்டில் 48,840 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26 ஆம் நிதியாண்டில் 78,324 கோடி ரூபாயாக ஒரே ஆண்டில் உயர்ந்து, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 2.2 சதவீதமாக உள்ளது. மொத்த வருவாய் வரவுகளில் கிட்டத்தட்ட 23 சதவீதம் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. வருவாய் இழப்புகள் மற்றும் வரி வசூல் துறைகளில் நிலவும் திட்டமிட்ட ஊழல் காரணமாக, 2021-22 ஆம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5.93 சதவீதமாக இருந்த வரி வருவாய், 2025-26 ஆம் நிதியாண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.


16. அரசுக்கு நியாயமாகச் சேர வேண்டிய, திசைமாறிச் சென்ற வருவாயை முறையாக அரசின் கருவூலத்திற்குக் கொண்டு வர இந்த அரசு ஏற்கனவே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.  இதுவரை தடம்மாறிச் சென்ற வருவாயை அரசின் கணக்கிற்குக் கொண்டு வரும் பொருட்டு, மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணத்தை (Privilege fee) இந்த அரசு அண்மையில் விதித்துள்ளது. இதன் மூலம், அரசின் கருவூலக் கணக்கில் வரவு வராத வருவாய்கள் அனைத்தும் முழுமையாக முறைப்படுத்தப்பட்டும், அரசின் அதிகாரப்பூர்வ கருவூல வருவாயாக நேரடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டும், அரசிற்கு ஓர் ஆண்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் வரவுகளில் ஏற்படும் அனைத்து இழப்புகளையும், அதே போல் அரசுப் பணிகள் மற்றும் இதர அரசுச் செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் தடுத்து, நிதிநிலையை மீண்டும் சீரான பாதைக்குக் கொண்டு வர இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும்.


17. மிகவும் சவாலான நிதி நெருக்கடியினைத் தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் வேளையிலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்புடன், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதல் மூன்று உத்தரவுகளாக, நுகர்வோரின் மின் கட்டணத்தினைக் குறைத்திடும் விதமாக, அரசிற்கு ஏற்படக்கூடிய 1,730 கோடி ரூபாய் செலவில், இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படையினை உருவாக்கவும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினை’ ஏற்படுத்தவும் ஆணையிட்டுள்ளார்.


18. பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இந்த அரசின் முதன்மையான லட்சியமாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிகக் கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கைகள் எடுத்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை‘, 2,545 புதிய பணியிடங்களுடன், 319 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன்களுடன் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பணியினை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும்.


19. கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முந்தைய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதற் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம்தான். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும். இதனைச் செயல்படுத்தும் விதமாக, போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படையை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.


20. பொதுமக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக, வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கள்ளச்சாராய நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கும், இத்துறையில் முழுமையான கண்காணிப்பை ஏற்படுத்துவதற்கும் தேவையான கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம், ஆயத்தீர்வை வசூல் மற்றும் மதுபான விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்பட்டு, மாநிலத்தின் சமூக-பொருளாதாரச் சூழல் நல்வழிப்படுத்தப்படும்.


21. தமிழ்நாட்டில் கனிமவளத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் முறைகேடுகள் காரணமாக கனிமவளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கனிமவளங்களை திறம்படவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படுவதையும் இந்த அரசு உறுதி செய்யும். அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசைமாறிச் செல்வதைத் தடுத்து, அது முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதற்காக, முறையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளின் வாயிலாக, கனிமங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது.


22. இந்த அரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பெருமக்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிப்பதற்கு வழிவகை ஏற்படுவதுடன், மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பிற்கும் உதவிகரமாக இருக்கும். இத்திட்டமானது மண் வளத்தை மேம்படுத்தி அதன் மூலம் வேளாண் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ், தற்போது வரை 18,274 ஏரிகள் மற்றும் குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.




23. வேளாண் பெருமக்களுக்கு உதவும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், மற்ற விவசாயிகளுக்கு 35,000 ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 14.43 இலட்சம் விவசாயிகள் பயனடைவர். இதனால், சுமார் 6,000 கோடி ரூபாய் அரசிற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.


24. வேளாண் துறையை மறுமலர்ச்சி அடையச் செய்வதும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே இந்த அரசின் முதன்மைக் கொள்கையாகும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உடனடி நிதி உதவிகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மட்டுமின்றி, முறையான நீர்ப்பாசன மேலாண்மை, நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள், குளிர்பதனக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் நலன்களைக் காக்கும் முதன்மை சக்தியாக இந்த அரசு செயல்படும்.


25. நிர்வாக அமைப்பில் மலிந்து கிடக்கும் ஊழலை வேரோடு அறுத்து, நேர்மையான, வெளிப்படையான, தூய்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்கேற்ப, அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலவிய முறையற்ற நிதிப் பரிமாற்றங்களும், இடைத்தரகர்களின் தலையீடுகளும் முற்றிலும் ஒழிக்கப்படும்.


26. ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க நாம் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும்.


27. 1968 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்", என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும்.


28. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்மொழியை வழக்காடும் மொழியாகப் பயன்படுத்தவும், உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.


29. தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால் தான் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமமாகும். மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.


30. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.


31. உண்மையான கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அதன் கற்பித்தல் திறனையும் உயர்த்துவதிலேயே அடங்கியுள்ளது. இதற்கேற்ப, மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களைத் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கு இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமன்றி, உயர்கல்வித் துறையில் பல்வேறு அடிப்படைச் சீர்திருத்தங்களை இந்த அரசு கொண்டு வரும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி தமிழ்நாடு மாணவர்களுக்குக் கிடைக்கப் பெறும்.


32. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. டெல்டா மாவட்டங்களின் பிரதான நீர் ஆதாரமான காவிரி நீரினையே டெல்டா பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர். காவிரி நீரைப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமை மிகப் பழமை வாய்ந்தது. நம்முடைய உரிமையை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டிய பின்பும் காவிரி நீரைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய நிலை இருக்கிறது. உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர்தான் தமிழ்நாட்டிற்குக் கர்நாடக அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் உற்பத்தியும் கடுமையாகப் பாதிப்படையும். இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.


33. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பாதிக்கும் பல்வேறு சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். பருவமழை, புயல் மற்றும் பிற இயற்கைச் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டு, பாக் வளைகுடா பகுதியில் தங்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அடிக்கடி கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீண்டகாலம் பிடித்து வைக்கப்படுவதும், கணிசமான அளவில் அபராதங்கள் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒன்றிய அரசை இவ்வரசு தொடர்ந்து வலியுறுத்தும் அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.


34. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதிலும், தமிழ்நாட்டின் வனப் பரப்பு மற்றும் பசுமைப் பரப்பினை உயர்த்துவதிலும், சதுப்புநிலக் காடுகள், ஈரநிலங்கள், கடலோரப் பகுதிகள் என அனைத்து வகையான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்படும்.


35. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைக்காலங்களில் வரும் நீரைச் சேமிக்கவும் ஏதுவாக ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்புத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும். மேலும், கடலுக்குச் செல்கின்ற நீரைத் தடுக்கும் வகையிலும், மழைநீரினைச் சேமிக்கும் வகையிலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


36. தென் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணையாகும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஆணையிட்டதோடு, அணையை வலுப்படுத்திய பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் கேரள அரசானது, அதற்கு மாறாக, புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.


37. நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கவும், அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்கவும் இந்த அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும்.


38. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சளுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளவும், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு இடங்களுக்கு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் கிடைக்கவும், இவ்விடங்களுக்குப் பள்ளி மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் இந்த அரசு வழிவகை செய்யும். மேலும், ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டு இடங்களில் மிகை மெய்ம்மை மற்றும் மெய்நிகர் தோற்றம் (Augmented Reality, Virtual Reality) ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழர் நாகரிகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, அதன் அனுபவம் வழங்கப்படும். இவற்றுடன் இணைந்து, மாநிலத்தின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணிக்காக்கும் வகையில், ஒரு விரிவான 'நிலையான சுற்றுலா கொள்கை' (Sustainable Tourism Policy) வகுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்போடு உட்கட்டமைப்பை மேம்படுத்தி, தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலாத் தலமாக இந்த அரசு மாற்றும்.


39. வரும் 2036 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலக்குடன், தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற கொள்கையில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். இதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்க தேவையான அனுமதியினை ஒற்றைச்சாளர முறையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இதன்மூலம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி அடைவதோடு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


40. மாநிலத்தின் பொருளாதார நிலைத் தன்மையையும், தொழில்துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்குடன், முந்தைய தொழில் கொள்கைகளின் தொடர்ச்சியைக் பேணுவதோடு, தற்கால மற்றும் வருங்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒரு புதிய தொழில்கொள்கையை இந்த அரசு வகுத்து, உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும். அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், ஒற்றைச் சாளர முறையை (Single Window System) முழுமையாக டிஜிட்டல் மயமாக மேம்படுத்தி, எவ்வித நிர்வாகத் தாமதமுமின்றி அனைத்து அனுமதிகளையும் விரைந்து வழங்கி, 'தொழில் தொடங்குவதை எளிதாக்கும்' (Ease of Doing Business) சூழலை இந்த அரசு மேம்படுத்தும்.


41. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்படும். இந்த ஆணையத்தின் மூலம், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


42. வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மையான குறிக்கோள். வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டவும், அவர்கள் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்த அரசு ஏற்படுத்தித் தரும்.


43. இந்தியாவில் நகரமயமாதலில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. வரும் 2031 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறச் சிறப்பிற்கான இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு திகழும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியும் தங்களது குடிமக்களுக்கு உயர்தர வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் தூய்மையான குடிநீர் விநியோகம், நவீன நகர்ப்புறக் கட்டமைப்பு, பசுமையான மற்றும் தூய்மையான சூழல், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கும்.


44. அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப, குறித்த நேரத்தில், எவ்வித ஒளிவுமறைவின்றி, தேர்வாணையங்கள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசுப்பணிக் கனவு மெய்ப்படும்.


45. செயற்கை நுண்ணறிவிற்கு (AI) தனி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் வரம்பைச் செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. அரசுத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களுக்குச் சிறந்த மின்-ஆளுமை (e-governance) சேவைகளை வழங்கவும், இத்துறை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தத் துணைபுரியும்.


46. தமிழ்நாடு அரசு சமூகநீதியைக் காப்பதில் உறுதியுடன் இருந்து, தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், சிறுபான்மையினரின் அரணாகத் திகழும் இவ்வரசு சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் என்றும் உறுதுணையாக இருக்கும். இந்த அரசு, ஒரு உண்மையான ‘மதச்சார்பற்ற சமூகநீதி’ அரசாகத் திகழும் என்பதில் எனக்கு ஐயமில்லை.


47. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உயர்தரப் பள்ளிப் கல்வி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள், வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு, பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாடு என அனைத்து வகையிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதியினை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு திகழும்.


48. மாற்றுத் திறனாளிகளின் நலனைப் பேணிப் பாதுகாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழும். டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சமமான அணுகல் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்குச் சிறப்பு கவனம் அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.




49. எதிர்கால ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஆற்றல் மையமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒலிம்பிக் உயர்திறன் மையங்கள் (Olympic Centres of Excellence) அமைக்க இந்த அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மையங்கள், உலகத் தரத்திலான பயிற்சி உட்கட்டமைப்பு, உயர்தரப் பயிற்சி, நவீன விளையாட்டு அறிவியல் வசதிகள், செயல் திறன் பகுப்பாய்வு மற்றும் முழுமையான விளையாட்டு மேம்பாட்டுச் சேவைகளை வழங்கும்.


50. திருநர் கண்ணியத்துடன் வாழ வழிசெய்யும் விதமாக, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும், சுயஉதவிக் குழுக்கள் அமைத்திடவும், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புப் பெற்றிடத் துணை புரிந்தும், வீட்டுவசதிகளை உருவாக்கிடவும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.


51. நமது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொள்ளும். கோயில் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் அறக்கட்டளை வருவாய்கள் அனைத்தையும் முழுமையாகத் தணிக்கை (Audit) செய்வதற்கும், கணக்குகளை வெளிப்படையாகவும், கணினிமயமாகவும் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காலங்களில் நிலவி வந்த நிர்வாக முறைகேடுகள் முற்றிலும் களையப்பட்டு, கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதி செய்யப்படும்.


52. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு ஊழியர்கள். இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.


53. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்குவித்திடவும், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ‘வெற்றித் தமிழகம் – தொலைநோக்குத் திட்டங்கள்’ அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வரசு செயல்படுத்தும். தமிழ் அடையாளம் மற்றும் பெருமை, கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு,  மகளிர் நலன், இளைஞர் நலன்,விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் நலன், உலகத்தரம் வாய்ந்த கல்வி, வளமான தமிழ்நாடு, சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல், உலகத்தரமான கட்டமைப்பு, மக்கள் நல அரசு – நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் எனப் பத்து தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையாக இது இருக்கும்.


54. எத்தனை தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தைத் தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும். அரசினால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.


55. தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில், படை பலம், பண பலம், அதிகார பலத்தைத் தாண்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இம்மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் எல்லாம் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த மாமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொண்டு, அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.


56. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்றாற்போல அனைவருக்கும் இணையான அரசாக, மக்களுக்கான அரசாக, விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக, வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி இந்த அரசு செயல்படும்.


57. தமிழ்நாட்டை இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் தமிழ்நாடு விளங்கப் பாடுபடுவோம். அரசின் இந்த முயற்சிக்குச் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கேட்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்