நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
சென்னை : தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு ஏறக்குறைய 3 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆரம்பத்தில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் ஒருவர் இருக்கிறாரா? அண்ணாமலை அளவிற்கு இவர் அதிரடி காட்டாமல், ஆள் இருக்கும் இடமே தெரியாமல் அமைதி காத்து வருகிறாரே என்று எல்லாம் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே நயினார் நாகேந்திரன் தீவிரமாக களமிறங்கி, அதிரடி காட்ட துவங்கி உள்ளார். ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து தனது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கு காரணம், பாஜக தலைமை நயினார் நாகேந்திரனுக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட் தானாம். அதனால் தான் நயினார் நாகேந்திரன் எடுக்கும் சில முடிவுகளுக்கு பாஜக தலைமையும் தொடர்ந்து க்ரீன் சிக்னல் கொடுத்து வருகிறதாம். சமீபத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்ட, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலவரை கட்சியில் இருந்து நீக்கியது இதை உறுதி செய்துள்ளதாக அமைந்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் பாஜக இந்த அசைன்மென்ட்டை நயினார் நாகேந்திரனிடம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன அசைன்மென்ட் என கேட்கிறீர்களா? வேறு ஒன்றும் கிடையாது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமை, பாஜக.,விற்கு 25, 30, 35 என எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதிமுக தலைமை ஒதுக்கும் தொகுதிகளில் 80 முதல் 95 சதவீதம் பாஜக.,வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை பாஜக நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை தேர்தல் ஒன்றையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பது தான் அந்த அசைன்மென்ட்.
கிடைக்கும் வாய்ப்பு எதையும் தவற விடாமல் ஆளும் திமுக.,விற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். பாஜக.,வின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எப்படியாவது இந்த முறை அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக ஆக்க வேண்டும். இதற்கு தடையாகவோ, எதிராகவோ கட்சியில் யாராவது செயல்பட்டாலோ, பேசினாலோ அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கையை எடுக்க கொஞ்சமும் தயக்கம் காட்டக் கூடாது என்பதை பாஜக தலைமை மிக கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாம்.
அதிமுக-பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்கும் வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும். அதை விட்டு கூட்டணியை குலைக்க, கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்தால் அவர்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கட்சியில் உள்ள அனைவருக்கும் ரகசிய உத்தரவையே பிறப்பித்துள்ளதாம் பாஜக தலைமை. அதனால் தான் நயினார் நாகேந்திரனும், கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.