முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

Su.tha Arivalagan
Dec 31, 2025,10:27 AM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ந்தேதி தொடங்க உள்ளது. இந்தச் சூழலில், சட்டசபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் நிகழ்த்த வேண்டிய உரையின் வரைவு மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளது.





பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் அல்லது நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குமாறு அரசை நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய கூட்டம் என்பதால், எதிர்க்கட்சிகள் முடிந்தவரை கிடுக்கிப்பிடி போட முயற்சிக்கும். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மற்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய புதிய மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரைகளை வழங்கக்கூடும்.

இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.