4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dec 27, 2025,01:55 PM IST

திருவண்ணாமலை: பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்  உண்டாக வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறோம். 4 திட்டங்களால் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.4,000 மிச்சமாகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு உழவர் நலத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார்.


விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், டிரோன்கள் மற்றும் சொட்டு நீர் பாசன முறைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்கள் குறித்த தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.




இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் விவகாயிகள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து மலப்பாம்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஸ்டாலின் ரூ.2,095 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். அதேபோல் 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2.66 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவுகளை வழங்கினார். கண்காட்சியின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.


அதன்பின்னர் முதலமைச்சர் பேசுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இந்த அரசின் முதன்மையான நோக்கம். உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய கண்காட்சிகள், விவசாயிகளை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்.


திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன் அடையாத ஒரு குடும்பம்கூட, தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவிற்கு செயல்படுவோம். சொன்ன திட்டங்களை விட, அதிகமான அளவு சொல்லாத முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.


தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது. ஆனால் இவர்கள் பேசுவதை பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மை, திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி குறித்து தேடிப் படித்து நமக்கு ஆதரவாக யூடியூபர்கள் வீடியோ போடத் தொடங்கிவிட்டனர்.


 சனிக்கிழமை மட்டுமே நடைபெற்று வந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இனி வியாழன் அன்றும் நடைபெறும். 4 ஆண்டுகளில் நாடே போற்றும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்  உண்டாக வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறோம். 4 திட்டங்களால் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.4,000 மிச்சமாகிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்