நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில்.. அந்தப் பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா?

Feb 12, 2026,01:01 PM IST

விசுவாவசு வருடம் 2026, பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி வருகிறது. இந்த தினத்தையொட்டி அருமையான சிவ தலமான நட்டாற்றீஸ்வரர் கோவில் குறித்துப் பார்ப்போம். 


ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவடிப்பாளையம் புதூர் நால் ரோட்டில் இருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காங்கயம் பாளையம் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், காங்கயம் பாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் மையப் பகுதியில் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஸ்தல வரலாறு பற்றிய சுவாரஸ்யமான புராணக் கதை பற்றி அறிந்து கொள்வோம்..


அகத்தியர் காவிரி செல்லும் வழியில் பல ஆலயங்களை தரிசித்து வந்தார். காவிரி வழியாக தெற்கே வரும் பொழுது இவ்விடத்தில் வாதாபி, வில் வலவன் என்று இரு அரக்கர்கள் வசித்து வந்தனர். இந்த இடத்திற்கு வரும் சிவனடியார்களுக்கு வாதாபி என்ற அரக்கன் உண்ணும் பக்குவமாகி அவ் உணவை கொடுத்து அவர்கள் உண்டபின் வாதாபியை வில்வலவன் அழைப்பான். அப்பொழுது உணவு கொண்டவரின் வயிற்றை கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே வருவான். பிறகு அவ்விருவரும் இவ்வாறு இறந்த சிவனடியார்களை சாப்பிட்டு வாழ்ந்து வரும் வேளையில் அகத்தியர் அந்த வழியாக வந்தார்.




அகத்தியருக்கு வாதாபி உண்ணும் பக்குவமாகி வில் வலவன் அகத்தியரை உணவு உட்கொள்ளுமாறு அழைத்தான். அகத்தியரும் அவ்வாறே உட்கொண்டார். அவர் தன்னுடைய ஞான திருஷ்டியால் அரக்கர்களின்  செயல்களை அறிந்து சிவ மந்திரத்தை கூறி 'வாதாபி ஜீரணோபவா' என்று வயிற்றை தடவினார். வாதாபி ஜீரணமாகிறான். வெளியில் உள்ள வில் வலவனை தனது தர்பாசனத்தில் உள்ள தர்ப்பையை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தால் வில் வலவனை  சம்ஹாரம் செய்கிறார். அவ்விரு அரக்கர்களும் அஜமுகி என்ற அரக்கிக்கும் துர்வாசர் என்ற முனிவருக்கும் பிறந்தவர்கள்.ஆதலால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.


பிரம்மஹத்தி தோஷம் விலக  வேண்டுமெனில் சிவபூஜை ஒன்றே சான்றானது என்று அறிந்த அகத்தியர் சிவபூஜை செய்ய ஆயத்தம் ஆகினார். அங்குள்ள மணலை சிவலிங்கமாக செய்து தனது ருத்ராட்ச மாலையை கழற்றி மணல் லிங்கத்திற்கு சாற்றி சிவ வழிபாடும் தவமும் செய்தார்.வருஷத் வயம் மாகிய சித்திரை மாதம் முதல் நாள் தவம் நிறைவு பெற்று லிங்கத்தை விசர்ஜனம் செய்யும் பொருட்டு சாற்றிய ருத்ராட்ச மாலை எடுக்க முற்பட்டார். ஆனால் அவரால் அதனை எடுக்க இயலவில்லை. அப்பொழுது சிவபெருமான் அசரீரி வாக்காக "உனது ஹத்தி தோஷம் நீங்குவதற்காக மட்டுமே எழுந்தருளவில்லை. இனி இந்நாளில் இங்கு வந்து என்னை வழிபடும் அனைவரது ஹத்தி தோஷம் முதலிய அனைத்து தோஷங்களையும் நீக்கிட இங்கு யான் அமர்ந்தோம்" என்று சிவபெருமான் வாக்கை சிரம் மேற்கொண்டு இன்னும் பல அரும் பணிகளை செய்திட தெற்கே செல்கிறார்.


அங்கே அகத்திய முனிவரால் மணலால் உருவகம் பெற்றமையால் "ரிஷி பிரதிஷ்டை" என்ற ஆர்ஷ லிங்கத் திருமேனியாக அருள்பாளிக்கிறார். தெற்கே சென்ற அகத்தியர் அனைத்து அரும் பணிகளை முடித்து பொதிகை மலையில் ஆஸ்ரமம் அமைத்து ஜோதிட வைத்திய சிற்ப சாஸ்திரங்களை முறைப்படுத்தும் பொழுது ககன மாத்திரக் குளிகையை தயாரிக்கிறார். இக் குளிகையை எந்த இடத்தில் நினைத்து உட்கொண்டாலும் அக்ஷணமே அவ்விடத்திற்கு செல்லலாம். இதனை சோதிக்கும் பொருட்டு அன்றொரு நாள் நடு ஆற்றில் பூஜித்த ஈசனை மீண்டும் வணங்கும்  பொருட்டு இவ்விடத்தை நினைத்து தாம் செய்த 16 குளிகைகளில் ஒன்றை உட்கொள்கிறார். 


அக்ஷணமே இங்கு வருகிறார்.அவரை வரவேற்கும் வண்ணமாக முருகப்பெருமான் வலது கால் முன்வைத்து இடது திருக்கரத்தில் கிளியுடன் அகத்தியர் முன் தோன்றி மீதம் இருந்த 15 குளிகை வாங்கி உட்கொள்கிறார். ஒன்றை வெளிக்கொணர்ந்த அகத்தியரிடம் அளித்து அதை உண்டு சாயு ஜ்யம்  அடையப் பணிக்கிறார். அதற்கு அகத்தியர் எனது ஸ்தூல சரீரம் கைலாய ஈசான மகுடத்தில் அனந்த சயனத்திலும், சூக்கும சரீரம் இவ்விடத்திலும், சொப்பன சரீரம் சதுரகிரி மலையிலும் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறார்.


இவ்வாலயம் காவிரியின் குறுக்கே மட்டுமல்லாமல் காவிரி உற்பத்தியாகும் குடகு முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை உள்ள தொலைவில் நடுமையமாக திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஸ்கந்த புராணத்தில் ஸ்வேதமலை என்று இடம்பெற்று இருப்பதாகவும், ஓம்கார வடிவில் அமைந்துள்ளதாக திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவ்வாலயத்தை தரிசிக்க வந்த பொழுது கூறியுள்ளார்.




இவ்வாலயத்தில் உள்ள சுவாமி,அம்பாளுக்கு காரிய காரணப்பெயராக இரு பெயர்கள் நடைமுறையில் உள்ளன. நல்ல நாயகி உடனமர் நட்டா ற்றீஸ்வரர்  (நடு ஆற்றில் உள்ளதால் காரணப்பெயராகவும்,) அன்னபூரணி சமேத அகஸ்தீஸ்வரர் (அகத்தியர் பூஜை செய்ததால் காரிய பெயராகவும்) அமைந்துள்ளது.


இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் சன்னதி சிவனின் வலப்புறத்தில் அமைந்துள்ளதால் அம்பாள் இங்கு சுதந்திர சக்தியாக விளங்குகிறார் . சிவ பக்தர்களுக்கும் மற்றும் சுற்றுலா பிரியர்களுக்கும் இவ்வாலயம் சிறந்த இடமாக திகழ்கிறது. இயன்ற பொழுது வாழ்வில் ஒரு  முறையேனும்  இவ்வாலயம் சென்று தரிசியுங்கள்.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்