தமிழக மீனவர்கள் கைது... மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 8.11.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியைச் சேர்ந்த திரு. ராமையன் என்பவருக்குச் சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், காற்று வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால் 9.11.2025 அன்று இலங்கை கடற்படை மீனவர்களால் கைது செய்யப்பட்டனர்.
நமது மீனவர்கள் படகில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தில் திசை மாறி இங்கே வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்று கோரியதை இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் ஒதுக்கித்தள்ளி சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ ? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.