Tamil Short Story: கறை நல்லது!

Su.tha Arivalagan
Jun 12, 2026,11:09 AM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி

 

மே ஐ கம் இன் சார்.. குரல் கேட்டு நிமிர்ந்தான் மேனேஜர் ராஜா.


ஒரு தலை ராகம் ஹீரோயின் போல் அழகான அமைதியான அடக்க ஒடுக்கமான புடவை முந்தானையால் உடம்பைப் போர்த்திக் கொண்டு.. பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் மகாலட்சுமி போன்ற ஒரு பெண்ணை இதுவரை ராஜா இண்டர்வியூ செய்தது இல்லை, இனிமேலும் அவன் இண்டர்வியூ செய்யப்போவதில்லை...


தன் மனதிற்குள் கலர் கலராய் பட்டாம்பூச்சிகள் படபடக்க, இதயம் எட்டிப் போய் எகிறித் துடிக்க,  செய்வதறியாமல் சிலையாகி... ஒரு வழியாய் இயல்பு நிலைக்குத் திரும்பினான் ராஜா..


எழுந்து நின்று,வாங்க உட்காருங்க என்றான். தேங்கயூ சார் என்றபடி..குனிந்த தலை நிமிராமல் இருக்கையில் அமர்ந்தாள் காவ்யா..


காவ்யா தன்னுடைய ஃபைலைக் கொடுத்துவிட்டு தன்னைப் பற்றிக் கூறினாள். கேள்விகள் கேட்க மறந்து...யு ஆர் அப்பாயிண்டடு... நாளைக்கே நீங்க ஜாய்ன் பண்ணலாம் என்றான் ராஜா...


தேங்க்யூ சோ மச் சார்‌ என்று நன்றியை உதிர்த்து விட்டு அலுங்காமல் குலுங்காமல் அன்ன நடை நடந்து வெளியேறினாள் காவ்யா..




டேய்...இன்னிக்கி ஒரு பொண்ண இன்டர்வியூ பண்ணினேன்டா.. இப்படி ஒரு அடக்க ஒடுக்கமான பொண்ண நான் பார்த்ததே இல்லடா.. 

உடனே அப்பாயிண்ட் பண்ணிட்டேன்.. 

நாளைல இருந்து வேலைக்கு வர போற டா ..

என்னவோ தெரியல, அவ நெனப்பாவே இருக்குடா என்று தன் நண்பனிடம் தொலைபேசியில் தொல்லை கொடுத்தான் ராஜா...


இண்டர்வியூ முடிந்து வந்த காவ்யாவிடம் .. இன்டர்வியூ என்னாச்சு காவ்யா என்று கேட்டாள் அவள் அம்மா... காவ்யா பதில் ஏதும் சொல்லாமல் அறைக்கு வேகமாக ஓடினாள்... கதவை சாத்தும் முன் உள்ளே நுழைந்த அம்மா பதில் சொல்லாமல் எதுக்கு உள்ள ஓடி வர ..என்ன ஆச்சு.. என்று படபடப்புடன்  கேட்டாள்... 


நீ வேறம்மா காலைல அவசரத்துல கறை இருக்குறத  கவனிக்காம இந்த பிளவுஸ் போட்டுட்டு போயிட்டேன்மா...

பஸ்ல போய் தான் பார்த்தேன்... 


இன்டர்வியூ அட்டென்ட் பண்ண நான் போயிட்டு வர்றதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டேன்மா...என்றாள். அதைக் கவனித்த அம்மா, கண்ணுக்கு தெரியாத இந்தக் கறைக்காடி, இவ்வளவு அலட்டிக்கிற... என்று புலம்பிக் கொண்டே  வெளியேறினாள்....


மறுநாள் விடியற்காலையில் சீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு புத்தம் புது ஆடை அணிந்து ஒன்றுக்கு பத்து முறை கண்ணாடியைப் பார்த்து தலைவாரி, டிபன் சாப்பிட்டு போடா என்ற அம்மாவின் குரலுக்கு செவி கொடுக்காமல் வேகமாக ஓடிப்போய்க் காரைக் கிளப்பினான் அலுவலகம் நோக்கி ராஜா...


காவ்யா மேடம் உங்களை மேனேஜர் கூப்பிடுறார் என்றார் அலுவலக உதவியாளர்...


நீல வண்ணப் புடவையில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து கொண்டு, ஹை ஹீல்ஸ் போட்டுக் குதிரை போல் நடந்து, விரித்த கூந்தலை ஸ்டைலாய் கோதி விட்டுக் கொண்டே குட்மார்னிங் சார்... என்ற காவ்யாவைப் பார்த்ததும் மனதில் பட்டாம்பூச்சிகள் படபடக்கவில்லை... ஒரே நாளில் கட்டிய காதல் கோட்டை டமால் டுமீல் என நொறுங்கி தரைமட்டமானது... தன் நண்பனிடம் சொன்ன அந்த வார்த்தை மனதிற்குள் வந்து வந்து போனது... 


"அடக்க ஒடுக்கமான பொண்ணுடா அவ"


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).