சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி
ரியாத் : தமிழகத்தின் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி, சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் 96.9 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இரண்டு மொழிப் பாடங்களில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி சகிகா ரூகி. இவர் தற்போது சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ள அல் யாஸ்மீன் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் இங்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இவர் பத்தாம் இறுதி தேர்வில் சிறந்து விளங்கி, 500க்கு 483 மதிப்பெண்கள் (96.9%) பெற்று, பள்ளிக்கூட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தாயார் மெஹ்ராஜ்பானு அதே பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சையது முகமது, சவுதி அரேபியாவில் உள்ள Smart Shield Cyber Security நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது தங்களுக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.