தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

Su.tha Arivalagan
Aug 10, 2026,03:03 PM IST

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் பாடிய பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தைக் கடைசியாகப் பாட வேண்டும் என தாங்கள் எந்தவித வற்புறுத்தலும் செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு முறைப்படி விளக்கம் அளித்துள்ளது.


வழக்கின் பின்னணி:

தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்வி நிறுவன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தொடக்கத்திலும், ‘தேசிய கீதம்’ நிறைவிலும் பாடப்படுவது வழக்கமான மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் முதலில் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும், அதனைத் தொடர்ந்து ‘தேசிய கீதம்’ இசைக்கப்பட வேண்டும்  மற்றும் அதற்கு பிறகே மாநிலங்களன் மொழி பாடல் இசைக்கப்பட வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு கூறி இருந்தது. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை நிகழ்ச்சியின் இறுதியில் தான் பாட வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை வழக்கம் போல் முதன்மையாகவும், முதலிலும் பாட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.


மத்திய அரசு அளித்துள்ள பதில்:




இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும்; தமிழ்த்தாய் வாழ்த்தைக் கடைசியில் தான் பாட வேண்டும் என்று நாங்கள் எவ்வித வற்புறுத்தலையும் செய்யவில்லை" எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் முறை குறித்து எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் அளித்துள்ள இந்த விளக்கம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


கடந்த சில மாதங்களாகவே கவர்னர் கலந்து கொள்ளும் தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதே விவகாரத்தை முன்னிறுத்தி தமிழக அரசு சார்பில் இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்த தனி தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சமயத்தில் மத்திய அரசு, கோர்ட்டில் இப்படி ஒரு விளக்கத்தை அளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.