தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Aug 10, 2026,05:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முதல்வர் சி. ஜோசப் விஜய் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் ஒரு மனதாக ஆதரித்தன. சட்டசபையில் இந்தத் தீர்மானத்தை எந்தக் கட்சியும் எதிர்க்காத காரணத்தால் எதிர்ப்போரே இல்லாமல் தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.


முன்னதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது:




தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட "தமிழ்த்தாய் வாழ்த்து" 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 


2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிய கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.


ஆகவே, "தமிழ்த்தாய் வாழ்த்து" தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்