சென்னை : மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமாரவேலுவை ஆதரித்து தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று பிரச்சாரம் செய்தார்.
இதில் விஜய் பேசிய உரை மதுராந்தகம் தொகுதி மக்களை மட்டுமல்ல தமிழக மக்களை கவருவதாக இருந்ததா? இல்லையா? வாங்க அலசலாம்.
- முதல்வர் விஜய்யின் இன்றைய பேச்சில் அதிமுகவினரை அலேக் செய்யும் கவர்ச்சி வார்த்தைகள் அதிகமாக இருந்தன. அதேசமயம், திமுகவை கடுமையாக அட்டாக் செய்யவும் அவர் தவறவில்லை.
- திமுக.,வை தாக்கும் வகையில் முதல்வர் விஜய்யின் பேச்சு இருந்தாலும், உண்மையில் அதிமுக ஓட்டுக்களை கவருவது விஜய்யின் நோக்கமாக இருந்தது தெளிவானது. ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமாரவேலு மீது மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை போக்க வேண்டும் என்பதற்காகவே, "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பொது எதிரியாக இருந்தவர்கள் திமுக. இன்று உங்கள் விஜய்க்கும் எதிரியாக இருப்பவர்கள் திமுக தான். அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அதிமுக முயற்சி செய்ததை அதிமுக தொண்டர்களால் எப்படி ஏற்க முடியாது. எம்ஜிஆரின் தொண்டர்களே...அதிமுக தொண்டர்களே நான் இருக்கிறேன். உங்களை கை விட மாட்டேன்" என விஜய் பேசினார் என்பது தெளிவாகி உள்ளது.
- திமுகவை மட்டுமல்லாமல் இந்த முறை பாஜகவையும் கடுமையாக தாக்கிப் பேசினார் முதல்வர் விஜய். அதை விட ஒரு படி மேலே போய் டெல்லியில் உள்ள திமுகதான் பாஜக என்றும் அவர் கூறியது பாஜகவினரை அதிர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- பாலியல் புகாரில் சிக்கிக் கைதாகியுள்ள வீரமணி குறித்தும் மிகக் கடுமையாக விஜய் பேசியது பெண் வாக்காளர்களின் ஆதரவை ஒரு சேர வாரியிழுக்கும் என்று கருதலாம். காரணம், வீரமணியை அவன் இவன் என்று ஒருமையில் படு காட்டமாக விஜய் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் தனது பேச்சை துவங்கும் போதே, தான் ஒரு முதலமைச்சராக வரவில்லை. எப்போதும் போதும் போல் பிரச்சாரம் செய்யவே வந்துள்ளேன்" என்றார். ஆனால், முதலமைச்சராக வராமல் தவெக கட்சி தலைவராக மட்டும் வருவதற்கு எதற்காக இத்தனை பாதுகாப்பு, செலவுகள், பாதுகாப்பு அதிகாரிகள் வர வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வருவதை போல் தனது பிரச்சார வாகனத்தில் சாதாரணமாக வந்து பேசி விட்டு சென்றிருக்கலாமே? குறைந்தபட்சம் அதிக செலவு செய்யப்படுவதையாவது குறைத்திருக்கலாமே என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
- தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துடன் ஒப்பிடும் போது, மதுராந்தகம் தொகுதியில் விஜய்யின் இன்றைய பிரச்சார பேச்சு அதிகம் கவரும் விதமாக இல்லை. எதையோ பேச வந்து, அதை பாதியில் விட்டு விட்டு அடுத்த விஷயத்திற்கு தாவி சென்றதை போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒரு அரசியல் கட்சி தலைவராக மட்டும் இருந்த போது விஜய் போலீசில் அனுமதி பெற வேண்டும். இத்தனை நிமிடங்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தது. அதனால் பேச வேண்டியதை சுருக்கமாக பேசி விட்டு சென்றார். ஆனால் இன்று அவர் தான் முதல்வர். ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 மாதங்களில் தவெக செய்த விஷயங்களை பட்டியலிட்டு ஓட்டு கேட்டிருக்கலாம்.
- திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இடதுசாரி கட்சிகள் தவெக அரசை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் விஜய்யின் இன்றைய பிரச்சாரம் இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதை அழுத்தமாக அவரது பேச்சு இன்று பதிவு செய்யவில்லை.
- தமிழக சட்டசபையில் திமுக தொடர்பான 3 ஃபைல்கள் இருப்பதாக சொன்ன முதல்வர் விஜய், இன்றைய பிரச்சார உரையில் அது பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊழலை பற்றி விஜய் பேசவே இல்லை.
- ஆதவ் அர்ஜூனா பேசும் போது வீரமணி விவகாரம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தார். ஆனால் விஜய் தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன் கடைசியாக தான் அந்த விவகாரத்தை கையில் எடுத்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திமுக.,வை கேள்வி எழுப்பி, சென்டிமென்டாக பேசி, விசிலுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.
{{comments.comment}}