தடம் மாறும் தமிழர் பண்பாடு!

Su.tha Arivalagan
Nov 03, 2025,03:29 PM IST

- கவிநிலவு சுமதி சிவக்குமார்


புடம் போட்ட தங்கங்களே பிழை இல்லாத சிங்கங்களே

தடும் மாறிப் போகாது என்றும் எங்கள் தமிழர் பண்பாடு

இடம் மாறித்தானே போனது இனி வரும் காலங்களில்

படம் போட்டு காட்டவே படிக்க வந்தேன் நானும் கவிதையில்


அக்காலத்தில் காதல் அள்ளயள்ள குறையாது நிறையும்

இக்காலக் காதலோ கிள்ளிகிள்ளி தானே பார்க்க தோணும்

எக்காலத்திலும் காதல் அழியாத காவியமாகி பாடும்

முக்காலத்திலும் உணர்ந்தோரே முனிவராக போனாரே


கண்ணே கனியமுதே கற்கண்டே கனி ரசமே

பெண்ணே பூவேயென கொஞ்சியது அக்காலம் 

கண்டா வரச்சொல்லி தூதனுப்பி கைபிடித்து 

கண்ட இடத்திற்கும் கால் போகும் கழிச்சடையே இக்காலம்


கைகூடாமல் போனால் எங்கிருந்தாலும் வாழ்கவென

காதலை மறந்து தியாகியாவது அக்காலம்

கைக்கு எட்டாதப் போனாலும் காதலே இல்லையெனினும்

எங்கிருந்தாலும் எரிப்பேனென திராவகம் வீசுவது இக்காலம்




புலியைக்கூட பழங்காலக் கிழவி 

புடைக்கும் முறத்தால் துரத்தினால் அக்கால வீரம்

பூனைக்கூட பேயென எண்ணியெண்ணி 

பயத்தோடி பதுங்குவது இக்கால வீரம்


அறம் வளர்ந்தது சிரம் நிமிர்ந்தது

புறம் மலர்ந்தது தரம் உயர்ந்தது

மரம் விளைத்தது பரம் நிலைத்தது

மரம் கிளைத்தது சரம் முளைத்தது


காலம் காட்டிய காதலும் வாதம் மீட்டிய வீரமும்

களங்கமில்லாத நெறிமுறைகளும் காலத்தின் காவியங்கள்

நிலைமாறும் உலகில் அனைத்தும் நித்தமும் மாறினாலும்

விலைபோகாது காப்போம் எங்கள் வீரத்தமிழர் பண்பாட்டினை !!


(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)