மாட்டுப் பொங்கலோடு திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!

Su.tha Arivalagan
Jan 16, 2026,01:05 PM IST

- ஆ.வ.உமாதேவி


அதிகாலை எழுந்து 

வாசலில், 

அள்ளி தெளித்து, 

மெழுகி, கூட்டி 

அரிசிமா கோலமிட்டு 

நடுவே ,

மெழுகில் பூசணிப்பூ வைத்து, 

தொழுவத்தை தொழும் விதம், 

சுத்தம் செய்து, 

சாம்பிராணி புகையிட்டு 

காளைகளைக் குளிப்பாட்டி 

நெற்றியில் மஞ்சள், குங்கும, சந்தன பொட்டிட்டு, 

கொம்புகளுக்கு வண்ணம் அடித்து, 

வண்ண வண்ண நாடாவைக் கட்டி 




பலூனையும் சலங்கையும் ஒருங்கே சேர்த்துக் கட்டி, 

சத்தத்தை கூட்டவே 

இன்னும் கொஞ்சம் சலங்கையை கழுத்திலும் காலிலும் கட்டி, 

அழகாய் சிங்காரித்து 

மாப்பிள்ளையைப் போலவே 

மாட்டுப் பொங்கல் நாளிலே, 

வீதி உலா வருவதை 

பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியே! 

ஆண்டு முழுவதும் உழைக்கும் 

இவர்களுக்கு எடுக்கும் விழாவே! 

மாட்டுப் பொங்கல் விழாவே! 


உலகில் எவருக்கும் கிடைக்காத அற்புதத் தருவாக கிடைத்த, திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரையும் நினைவு கூறுவோம். 


புலவர்களிலே தெய்வீகப் புலமை கொண்டவர். எனவே தான் தெய்வப் புலவரோ!  

பொய்யே சொல்லாத எதார்த்தவாதிக்கு பெயர் பொய்யில் புலவரோ! 

பெரிய நாவன்மை கொண்டதால், பெருநாவலரோ! 

புலவர்களுக்கெல்லாம் மூத்தோன் என்பதால் முதல் பாவலரோ! 

இறைவனுக்கு நிகரானவர். எனவேதான், நாயனார் ஆனாரோ! 

செம்மையான மொழி பேசுபவரோ! எனவே செந்நாப் போதாரோ! 

தாய்க்கு நிகரான, எல்லாருக்கும் சமமான பொருள் சொன்னதால், மாதானுபங்கி ஆனாரோ! 

எந்தக் கடவுளையும் பெயர் சொல்லி குறிப்பிடாத நீர்!

சாதி மதம் பாராத உத்தமரோ! 

நீ எப்படி இருப்பாய்? என்பதை அறியா மக்களும், அறியும் வண்ணம், 

உனக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் ஷர்மாவை கை கூப்பி வணங்குகிறேன். 

வள்ளுவனே நீ எழுதிய முதல் நூலை மட்டும் சொன்னால் எப்படி? 


உனக்கான இந்நாளில் மற்ற நூல்களை நினைவுபடுத்தவே எழுதுகிறேன். 


1.ஞானவெட்டி 

2.நவரத்தின வைத்திய சிந்தாமணி 

3.பஞ்சரத்தினம் 

4.கற்பம் 

5.சூத்திரம் 

6.நாதாந்த திறவுகோல் 

7.குரு நூல் 

8.சூத்திரம் 

9.வாத சூத்திரம் 

10.முப்பு குரு. 


திருவள்ளுவர் தினத்திலே, 

தித்திக்கும் நினைவுகளை, 

திடமாக நெஞ்சில் நிறுத்தி, 

தமிழன் என்ற பெருமிதத்துடன் 

தமிழ் என்ற அமுதம் 

கிடைத்த மகிழ்ச்சியில் 

இன்பமாய், 

ஈந்து வாழ்வோமே!


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)