தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!
- பக்தித்தென்றல் பாவை.பு
பிரபஞ்சம் உருவானபோது ஒலி இல்லாமலும் அறிவு இல்லாமலும் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் பிரம்மா தன் மனத்திலிருந்து ஞானரூபினியாக சரஸ்வதி தேவியியை வெளிப்படுத்தினார்.
அவர் வெளிப்படுத்திய நாளே தை மாதம் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி, இதில் சரஸ்வதி தேவி அவதரித்ததன் காரணமாக, இந்த நாளில் இருந்து தான் வசந்த காலம் (குளிர்காலத்தின் முடிவு) ஆரம்பமாகிறது. இயற்கையின் சுழற்சியில் பூக்கள் புத்துயிர் பெறுகின்றன. இதனாலேயே தை மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி, வசந்த பஞ்சமி யானது.
சரஸ்வதியானவள் ஞானம், கல்வி, இசை, கலை, அறிவு ஆகியவற்றிக்கு அதிபதியாகிறாள். சரஸ்வதி மட்டுமல்ல ஒளி பிறந்த நாள், எழுத்து பிறந்த நாள், அறிவு உலகில் ஒளியாகிய நாள், ஆகையால் இந்நாள் மன இருள் விலகும் நாளாகிறது.
இந்த வசந்த பஞ்சமி திதியில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இளம் வயதில் சாந்தீபினி முனிவரிடம் கல்வி கற்க குருகுல வாசம் தொடங்கிய சிறப்பு மிக்க நாள்.
வசந்த பஞ்சமியை வட இந்தியாவில் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணரை போன்று மேற்கு வங்கத்திலும் வசந்த பஞ்சமி அன்று தான் தங்களது குழந்தைகளுக்கும் கல்வியை துவங்குகிறார்கள்.
குறிப்பாக மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிறத்திலான ஆடை, மஞ்சள் நிற பூக்கள் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது, பூஜையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் நிறத்திலே செய்து வைக்கிறார்கள்.
விநாயகருக்கும், சரஸ்வதி தேவிக்கும் படையல் வகைகள் அனைத்துமே மஞ்சள் நிறத்திலே தயாரிக்கிறார்கள்.
அன்று பெண்களும் மஞ்சள் நிற ஆடையையே அணிகிறார்கள்.
சரஸ்வதி தேவிக்குரிய நிறமாக வெள்ளை நிறம் இருந்தாலும், வசந்தபஞ்சமியில் அவள் மஞ்சள் நிறத்தையே விரும்புகிறாள். இது வசந்த காலத்தின் ஆரம்பம் என்பதால் சூரிய ஒளி பட்டு பூக்கள் மஞ்சள் நிறத்தில் பூத்து குளுங்குவதாலும், தை மாதத்தில் பூக்கக்கூடிய மலர்கள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருப்பதாலும், அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி மஞ்சள் நிறம் என்பதாலும், வசந்த காலத்தை வரவேற்கும் வதமாக வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ராஜஸ்தானில் உள்ள -பிரம்மா சரஸ்வதி கோயில், கர்நாடகா உடுப்பி உள்ள- கிருஷ்ணன் கோயில், ஒடிசாவில் உள்ள - பூரி ஜெகன்நாதர் ஆகிய கோயில் வசந்த பஞ்சமி வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பஞ்சமி வழிபாடு மிககுறைவு என்றாலும் காமதேனுவை போற்றும் பண்டிகையாக முன்னோர் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வருடம் வசந்த பஞ்சமியானது 22.1.2026 அன்று நள்ளிரவு 2.மணிக்கு தொடங்கி 23.1.2026
அன்று நள்ளிரவு 12.50 க்கு முடிகிறது. வழிபட சிறந்த நேரம் வெள்ளிக்கிழமை காலை 6.30-10.30
நாமும் வசந்த பஞ்சமி காலத்தில் சரஸ்வதி தேவியை வழிபாட்டு வாழ்வில் ஞான ஒளியை பெறுவோம்.