வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்

Jan 20, 2026,12:33 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


"சரஸ்வதி நமஸ்துப்யம்  வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ் யாமி  சித்திர் பவத்துமே  சதா "


ஞானத்தின் வடிவான சரஸ்வதி தேவி தோன்றிய தினமான வசந்த பஞ்சமியின் சிறப்புகளை தொடர்ச்சியாக இன்றும் காண்போம்..


மேற்கு வங்காளத்தில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி வழிபாடுகள் செய்து பள்ளிப் பருவம் அடைந்த குழந்தைகளுக்கு கல்வியை துவங்குவது  வழக்கம். வசந்த பஞ்சமி நன்னாளில் குழந்தைகளின் முன்பாக (எழுதுகோல் )பேனா, பென்சில், புத்தகம் மற்றும் சிறிய தொழில்நுட்பக் கருவிகள் என பலவிதமான பொருட்களை வைப்பர். அந்தக் குழந்தை ஆர்வமுடன் தன் எதிரில் உள்ள பொருட்களில் இருந்து ஏதாவது ஒரு பொருளை  கையில் எடுக்கும்.  அவ்வாறு அந்தக் குழந்தை எப்பொருளை எடுக்கிறதோ அதை வைத்து அக்குழந்தையின் ஆர்வமும்,எதிர்காலமும் அமையும் என்பது  அப்பகுதி மக்கள் நம்பிக்கை.




வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபட கல்வி,ஞானம், ஆயக்கலைகள் 64 ஆகியவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க ஏதுவாக அமையும்.பள்ளி, கல்லூரியில் படிக்கும் குழந்தைகளுக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த வேலை கிடைக்க, நல்ல பதவி, அரசு பதவி, உயர் பதவி தலைமை பதவி கிடைக்கப்பெற்று  என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.


பஞ்சாப் மாநிலத்தில் வசந்த பஞ்சமி காலத்தில் கடுகு செடிகளில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும்.இதன் அடிப்படையில் வசந்த பஞ்சமியில்  மஞ்சள் வண்ணம் முக்கிய பங்கு வகிக்கிறது. வித்யா ஆரம்பம் செய்து, சிறு குழந்தைகளுக்கு ஆடல், பாடல், இசைக்கருவிகள் வாசிக்க என பல கலைகளை கற்க அதற்குரிய வகுப்பில் இந்நன்னாளில் சேர்த்து விடுவார்கள்.


இந்த நன்னாளில்  "வித்யாரம்ப்  "அல்லது "அக்ஷராப் யாஸ்"  என்று அழைக்கப்படும் இளம் குழந்தைகளுக்கு எழுத்துக்கள் எழுதும் விழாவை நடத்துவது சிறந்தது என்று கருதப்படுகிறது.


வசந்த பஞ்சமி அன்று கல்வியை துவங்குவது ஒரு குழந்தையை புத்திசாலி, பண்பட்ட மற்றும் அறிவுள்ளவராக ஆக்குகிறது என்பது நம்பிக்கை.மேலும் கல்வி, கலை, இசை அல்லது வேறு ஏதேனும் படைப்பு வேலைகளுடன் தொடர்புடைய புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு இந்த நாள் மிகவும் மங்களகரமானது.


மங்களகரமான நேரம்:


சாஸ்திரங்களின்படி வசந்த பஞ்சமி என்பது ஒரு மங்களகரமான நேரம். இதன் பொருள் இந்த நாளில் எந்த மங்களகரமான பணியை துவங்குவதற்கு தனித்தனியாக மங்களகரமான நேரத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை. திருமணம், இல்லறம், பெயர் சூட்டும் விழா,வித்யா ஆரம்பம் போன்ற விழாக்கள் செய்ய நல்ல நாள். எனவே இது புனிதமான நாளாக கருதப்படுகிறது.


பஞ்சாப்,ஜம்மு -காஷ்மீர், ஹரியானா,அசாம், திரிபுரா,ஒடிசா ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி கோலாகலமாகவும், வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சரஸ்வதி தேவியின் படத்திற்கு அல்லது உருவச்சிலைக்கோ மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்து, தாங்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து, மஞ்சள் பிள்ளையார்  வைத்து, மஞ்சள் நிற இனிப்பு பண்டங்கள் கேசரி,லட்டு போன்றவற்றை  நைவேத்தியமாக படைத்து வழிபாடுகள் நடைபெறும்.


பச்சரிசி மாவினால் "சரஸ்வதி யந்திரம்" வரைந்து, மஞ்சள் நிற பூக்களை வைத்து அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். சில வீடுகளில் செம்பு "சரஸ்வதி  யந்திரம்" வைத்து மஞ்சள் பூக்களை வைத்து வழிபாடு செய்வர்.

 ஏனெனில், மஞ்சள் நிறம் அறிவு,செழிப்பு,உற்சாகம் மற்றும் நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். வசந்த பஞ்சமி நாளன்று செய்யும் தியானம் மற்றும் வழிபாடு அறிவைப் பெறுவதற்கான தடைகளை நீக்குகிறது. கல்வி மற்றும் தொடக்கக் கற்றலுக்கான மங்களகரமான நாள் இது.

வசந்த பஞ்சமி பருவ மாற்றத்தை குறிப்பது மட்டுமல்லாமல், புனிதமான நல்ல துவக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்