வெறுமை

Su.tha Arivalagan
Jan 17, 2026,10:10 AM IST

- ஆனந்தி.ச


காகம் “கா கா “,என கத்துவதை கேட்டு தடாலென எழுந்து தன் அருகில் இருந்த செல்போனை துழாவி மணியை பார்த்தவளுக்கு திக் என்றது .. மணி எட்டு பத்தையும் தாண்டியிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமைதான். ஆனாலும்  வயிறு என்று ஒன்று உண்டு, பசி என்று ஒன்று தலை தூக்கிப் பார்த்தது. 


அவளின் நினைவலைகள் இருபதுவருடங்களுக்குப்பின்னோக்கி பறந்தது.. அப்பொழுதல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றாலும் காலை 4 30 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும், தூங்கவேண்டும் என் நினைத்தால் கூட தூங்கிவிடமுடியாது .. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் இரண்டு வருட இடைவெளியில்

பிறந்துவிட்டதால் .. ஒருவன் தூங்கினால் கூட மற்றவன் எழுந்துவிடுவான் .. ஒருவன் பசியாற பால் கொடுத்து சிறிது நேரம் கொஞ்சி விளையாடி தூங்க வைத்தோமானால், அம்மா என இன்னுமொருவன் எழுந்துவிடுவான் .. 


இரண்டு வருட இடைவெளிக்கே இப்பாடு என்றால், ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர் மூவரின் அம்மாக்களின் பாடு அதோகதிதான் என அவள் மூச்சிற்கு முந்நூறு தடவை நினைத்துக்கொள்வதுண்டு.. எப்பொழுதும் வீடு முழுவதும் விளையாட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் .. எடுத்து வைத்த சில நிமிடங்களிலேயே மறுபடியும் தரையில் கொட்டிவிடப்படும் .. 




அம்மா இவனைப்பாரேன், இவன் என்னை அடிக்கிறான் .. இவன் என் பொம்மையை பிடுங்குறான் .. ஓயாத இவ்வோலங்கள் கேட்ட வண்ணமே இருக்கும் .. சமையலிலோ இவனுக்கு பிடித்தது அவனுக்கு பிடிக்காது . அவனுக்கு பிடித்தது இவனுக்கு பிடிக்காது .. இருவருக்கும் பிடித்த ஏதாவது ஒன்று இருக்குமானால், அது வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் பிடிக்காது. ஒவ்வோர் நாள் மாலையும் தொடங்க ஆரம்பித்துவிடும் அவளது அடக்குமுறைகள்.. 


ஏய் அதை தொடாதே.. ஏய் ஏய் அதை எடுக்காதே .. அங்க ஓடாதே .. இங்கே உட்காராதே  .. நம் வீட்டில்

மட்டுந்தான் இந்த மாதிரி சத்தம் கேட்குதா ? இல்ல எல்லா வீட்டிலும் இப்படித்தானா? பல முறை மனதில் தனக்குதானே கேட்டுக்கொள்வாள்.. ஐந்து வருடங்களுக்கு பின்னால், அவர்கள் அழைத்து வரும் நண்பர்களுக்கும் , அடிக்கும் கொட்டங்களுக்கும் அளவே இருந்ததில்லை .. வீடே இரண்டுபடும் அளவிற்கு சிரிப்பு அலைகள், இல்லை இல்லை சுனாமி என்றுதான் சொல்லவேண்டும். காதில் பஞ்சை வைத்துக்கொள்ளும் அளவிற்கு பாட்டு வைத்து , கூட கத்தியபடியே பாடுவார்கள் .. வரும் நண்பர்களுக்கு காபி, ஸ்நாக்ஸ் என கொடுத்து அலுத்துக்கொண்டதும் அவளுக்கு ஞாபகம் வந்தது.


குழந்தைகளாக இருந்த வரையில் அவளின் தோளைக் கட்டிக்கொண்டு தூங்குவார்கள் .. பெரியவன் ஒருபுறம் .. சிறியவன் ஒரு புறம் .. கைகளை மறுநாள் தூக்கக்கூட முடியாது .. தனியா படுங்க தனியா படுத்து பழங்குங்க,  என திட்டினாலும், எட்டாவது வரையிலும் அப்படியே தான் தூங்கியதும் நெஞ்சில் நிழலாடியது.. இருவரும் மிக சமத்து குழைந்தைகள். என்னதான் அம்மா அம்மா என்று அடிக்கடி அழைத்தாலும் இருவருமே அப்பா செல்லம்தான்.. அப்பா சொல்லைத் தட்டாதவர்கள் என்பதையும் அவள் நன்கு புரிந்து வைத்திருந்தாள்.


நாட்கள், நம்மை விட வேகமாக ஓடத்தொடங்க, மகன்கள் வளர .. படித்து முடித்து வேலையில் வெளிநாட்டிலிருக்க . நினைவலையிலிருந்து மீண்டு நிஜத்திற்கு வந்த அவள் படுக்கையைவிட்டு எழுந்தாள் .. இன்றும் ஞாயிறு தான் ,ஆனால் அம்மா என எழுப்ப ஆளில்லை .வீடே மிக அமைதியாக இருக்கிறது .. வைத்த பொருள் வைத்த இடத்தில் சீண்டுவாரின்றி.. இதை தொடாதே அதை எடுக்காதே  என்ற குரலுக்கு வேலையில்லை .. நண்பர்கள் யாரும் வருவதில்லை .. காதை துளைக்கும் பாட்டு இசையில்லை .. காப்பி போடும் வேளையில்லை.


இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தைகளை கடிந்துகொள்வதையோ, அல்லது இதை தொடாதே ,எனக்கூறுவதை பார்த்தால், பண்ணட்டும்மா இது போன்ற சொர்க்கம் வேறேதுமில்ல .. என்ன ,கொஞ்சம் வளருகின்ற வரையில்தான் அப்புறமா .. நீ கத்துன்னாலும் கத்த ஆளிருக்காது என பக்குவப்பட்டவளா மாறி  பரிதவிக்கிறாள்.. யாராவது வீட்டிற்கு வர மாட்டார்களா ? என ஏங்க தொடங்கினாள்.. யாரையாவது பார்த்தால் வீட்டுக்கு வாங்களேன் .. இரண்டு நாட்கள் தங்கிட்டு போங்களேன், எனவும் கூற ஆரம்பித்து விட்டாள் .. 


மகன்கள் போன் செய்தாலே, எப்படா வீட்டுக்கு வர்ற ? என்பதுதான் அவளின் முதல் கேள்வியாக இருக்கும். அவளின் வீடு போன்றே அவளின் மனதும் வெறுமையானது.


(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)