புன்னகை எனும் மொழி!
- கவிதா அறிவழகன்
ஆயிரம் வார்த்தைகள்
அடுக்கினாலும் வராத நெருக்கம்…
ஒரு சிறிய புன்னகையில் பூத்துவிடுகிறது!
ரோஜா கூட்டங்களுக்கு இடையில்
தனித்திருக்கும் கருநிற ரோஜாவாய்…புன்னகை எனும் மொழி
ஆயிரம் முகங்களுக்கு மத்தியிலும்
உன் மௌனத்தை மட்டும்
மனம் பிரித்தெடுத்து பார்க்கிறது.
மீட்டாத வீணையில்
உறங்கும் ராகம் போல…
வெளிப்படுத்தாத எண்ணங்களையும்
உன் கண்கள் அசையும் நொடியில்
இசைக்கத் தொடங்கும் ஒத்த ராகம்!
வண்ணங்கள் சிந்தாமல்,
தூரிகை தீட்டாமல்…
இதயத்தின் வெண்திரையில்
ஒருவருக்கொருவர் வரைந்துகொள்ளும்
அழகிய மௌன ஓவியம்!
கேட்காத ஓசைக்கு
பதில் சொல்லத் தேவையில்லை…
மழை வரும் முன்னே
மண் தரும் வாசம் போல,
சொல்லாத சொல்லுக்கு
உன் புரிதல் ஒன்றே போதும்!
என்னை விட்டுப் பிரியாத நிழலாய்…
என்னோடு கலந்த நதியாய்…
தேடல்கள் ஏது
மின்றி
தெளிவான நீரோடையாய்…
தொடர்கிறது நம் அழகிய புரிதல்!
பிறவிகள் மாறினாலும்
நம்முள் பிறந்த உணர்வு மாறாது…
உருவங்கள் மாறினாலும்
நம்முள் நெய்த இணைப்பு கலைந்து போகாது…
ஆத்மா ஒன்றை ஒன்று அறிந்துகொள்ளும்…
அங்கே...
பிரிவும் இல்லை, எல்லையும் இல்லை…
ஒரே ஒளியாக
என்றும் தொடர்கிறோம் நாம்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)