மனைவி!
Dec 27, 2025,11:12 AM IST
- ந.தீபலட்சுமி
சில்லென்ற காற்றில் தவழ்ந்து,
அலை அலையாக வளைந்தும் நெளிந்தும்,
கரு கருவென நீண்ட நெடிய,
தன் கூந்தலை பின்னி முடித்தாள்,
அவள்.
தெளிந்த நீரோடை போன்ற தன் முகத்தில்,
மேடான நெற்றியின் நடுவே,
செந்தூரத் திலகமிட்டு,
கண்ணாடியில் தன்னை,
அளந்தாள்
அவள்.
கல கலவென ஓசையெழுப்ப,
இரு கைகளிலும் கண்ணாடி
வளையல்களை
வாஞ்சையுடன்
அணிந்தாள்
அவள்.
நேர்த்தியாக உடை அணிந்து,
நேர் கொண்ட பார்வையில்,
ஜல் ஜல் ஓசையுடன்
வெளியே வந்தாள்
அவள்.
கூடத்தில் கூடியிருந்தோர்
அடுத்த நொடி அங்கே
ஆரம்பமாயிற்று
ஒப்பாரி!
சிலையாக அமர்ந்திருந்த
அவள்,
இறந்து போன இந்திய
சிப்பாயின்
மனைவி!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)