ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

Su.tha Arivalagan
Dec 22, 2025,10:34 AM IST
- நீலகண்ட தமிழன்

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்
நாளைய உலக வரைபடத்தில் காணாமல் போகும் சின்ன கிராமம்
இயற்கையிலும் வளத்திலும் இளைப்பில்லாத எளிய கிராமம்

சுற்றிவர பச்சை வயல்கள்
அங்கங்கே பம்ப் செட் கிணறுகள்
ஏரிக்கரையில் வரிசையாய் மரங்கள்
இறகு விரித்து பறக்கும் பறவையின் கூடுகள் தாங்கும் கிளைகள்

பெரிய மனசு மனிதர்கள் வாழும்
சின்ன சின்ன குடிசைகள்
மாடுகள் மேய்க்க மேய்ச்சல் நிலங்கள்
ஏரி பாசனத்தில் தினந்தோறும் குளிக்கும் கொஞ்சம் வயல்கள்

இயற்கை படைத்த அழகான ஊர்களில் ஏகநாஞ்சேரியும் ஒன்று 
அது எங்கள் ஊர் என்பதில் எனக்கு பெருமையும் உண்டு
எல்லாம் கொஞ்ச நாள் தான்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஏகநாஞ்சேரி வரைபடத்தில் இருக்காது
2026 தைப்பொங்கல் 
இதுதான் எங்கள் ஊருக்கு கடைசி பொங்கலாம்





அதற்குப் பிறகு பொங்கலும் இருக்காது பொங்கல் வைக்க அந்த ஊரும் இருக்காது
அந்த ஊரில் மனித தலைகளும் இருக்காது

கோழிகள் நடந்த இடத்தில் எல்லாம் அலுமினிய பறவைகள் ஓசையிட்டு நகர்ந்து செல்லும்

இப்போது  பலமுறை கேட்டும் கிடைக்காத தார் சாலைகள். .. 
அப்போது
கேட்காமலே கிடைக்கும் சிமெண்ட் சாலைகள். .. 

தாத்தா கட்டிய சின்ன வீட்டில்
நான் வளர்ந்த கதை எல்லாம் அழிந்து போகும்

ஊஞ்சல் கட்டி ஆடிய  வேப்பமரம் நிழலாய் மாறும்

புனிதா பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புன்னை மரத்தடி கனவாய் போகும்

காய் உலுக்க ஏறி கீழே விழுந்த  புளிய மரத்தடி பொய்யாய் போகும்

டயர் சக்கரம் தட்டிக்கொண்டு
ஓடிய பாதைகள் இனி ஓடு பாதைகளாய் மாறி போகும்... 

நீயும் நானும் வாழ்ந்த ஏகநாஞ்சேரி... 

எங்கே போனதென்று என் பேரன் கேட்டால் 
என்ன பதில் சொல்வேன்? 

அதோ 
அந்த ஓடுதளத்தில் தான் 
நீ பிறந்து வளர்ந்த மண் இருக்கிறது என்று நான் எப்படி சொல்வேன்

எந்த நாட்டில் இருந்தோ எவனோ வந்து இறங்குவதற்காக
என் சொந்த நாட்டில் 
என் சொந்த கிராமத்தை நான் இழக்க வேண்டுமா? 

நாளைய வரைபடத்தில் என் ஊர் எங்கே என்று கேட்டால் என் தலைமுறைக்கு நான் எந்த இடத்தை காட்டுவேன்

ஆண்டுதோறும் கூழ் ஊற்றவும் பொங்கல் வைக்கவும் மொட்டை அடிக்கவும் காது குத்தவும் ஏரிக்கரையோரம் எங்களை காத்த மாரி அம்மன் கோயிலுக்கு இனி எப்படி போவேன்? 

எல்லாம் போச்சு என்று புலம்பும் என்னிடம் எதைக் கேட்டு நீங்கள் வருகிறீர்கள்

புழுதியைக் கிளப்பி சுமைகள் தாங்கி செல்லும் டிவிஎஸ் ஃபிப்டி வண்டிகள்... 

அதன் முன்னே காலை குறுக்கி அமர்ந்து செல்லும் 
எங்கள் ஊர் பெண்கள்

அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்லும் 
ஆட்டோக்கள்

மாட்டுப் பொங்கலுக்கு வந்து போகும் மைனர் சாமியின் டாட்டா சுமோ

பிளாஸ்டிக் பாய் விற்க வரும் குட்டி யானை

எப்போதாவது கான்ஸ்டபிளோடு வரும்  ஏட்டையாவின் மோட்டார் சைக்கிள்

அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று வாக்கு வாங்க  வரும் ஸ்கார்பியோ கார்கள்

இனி எதுவும் வரப்போவதில்லை
 
பதைக்கப் பதைக்க கிராமத்தையே  அழிக்கப் போகிறார்கள்

ஒன்றல்ல இரண்டல்ல ஏகநாஞ்சேரியோடு எத்தனை கிராமங்கள் ஜோலி முடியப்போகிறதோ

மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் என்று அழிக்கப்பட்ட கிராமங்கள் எத்தனை

வீடுகள இழந்த குடும்பங்கள் எத்தனை

இப்போது அது வேண்டாம் என்று பரந்தூருக்கு வந்து விட்டார்கள்

மனிதாபிமானம் இல்லாமல் ஏகநாஞ்சேரி என்ற கிராமத்தை உலகத்தின் வரைபடத்தில் இருந்து 
சின்ன ரப்பரை கொண்ட அழித்துவிட்டார்கள்

ஆகாய விமான பறக்கும் ஓசை எங்கள் அழுகை ஓலத்தை ஜெயித்து விடுமா? 

சொந்த நாட்டில் சொந்த ஊரை இழந்த அகதிகள் நாங்கள் 

அழுகை கண்ணீர்  உங்களைச் சும்மா விடாது... 

எங்கள் வெந்த நெஞ்சின் நெருப்பு... 
உங்களைச் சும்மா விடாது... 

இனி 
எந்த விமானம் 
இங்கு விபத்தானாலும்
அது இயந்திர கோளாறல்ல. ..
எங்கள் இதயத்தின் நோக்காடு...