தடாதகை என்று அன்னை மீனாட்சிக்கு பெயர் வந்தது எப்படி?.. அன்னை தடாதகை - 5
- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த தொடரில் கடம்பவனம் அழகிய மதுரை நகரமான கதையை பார்த்தோம். தற்போது அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
கடம்பவன காட்டை திருத்தி அழகிய மதுரை நகராக்கி, அதை பாண்டிய தலைநகராக்கி ஆட்சி செய்த குலசேகர பாண்டியன், தன் மகனான மலையத்துவச பாண்டியனுக்கு முடிசூட்டி , பின்னர் சில காலம் கழித்து சிவபதம் அடைந்தார். இம்மன்னரின் இயற்பெயர் வேறு, ஆனால் முடிசூடி பட்டாபிஷேகம் செய்யும் போது சூட்டப்பட்ட பட்டப்பெயரே "மலையத்துவசன்" என்பதாகும். "துவசம்"என்றால் கொடி என்று பொருள். பாண்டியர்களின் குல குருவான அகத்தியர் வாழும் பொதிகை மலையை தன் கொடியில் கொண்ட சிறப்பை குறிக்கும் வகையில், பட்டாபிஷேக நாமமாக "மலையத்துவசன்" என்ற பெயர் சூட்டப்பட்டு , பின்னர் அதுவே நிலைத்தது.
இந்த மலையத்துவச பாண்டிய மன்னருக்கும் , சோழ மன்னர் சூரசேனனின் மகளாகிய காஞ்சனமலைக்கும் திருமணம் நடைபெறுகிறது. இத்தம்பதிக்கு குழந்தை பேறு நீண்ட நாட்களாக இல்லை. எனவே தன் குல குருவான அகத்தியரிடம் மன்னர் மலையத்துவச பாண்டியன், உபாயம் கூறி, தன் குறையை போக்க வேண்டினார். தான் செய்த தவமெல்லாம் கூடி வரும் காலம் கனியப்போகிறது என்பதை உணர்ந்த அகத்தியர் மலையத்துவச பாண்டிய மன்னரிடம் நூறு அஸ்வமேத யாகம் செய்ய சொல்கிறார். அனைத்து யாகங்களிலும் மிகவும் மேன்மையானது, தன்னிகரற்றது இந்த அஸ்வமேத யாகம். இதை மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் மன்னர்களே செய்து முடிப்பது அரிது. ஸ்ரீ ராமர் இந்த அஸ்வமேத யாகத்தை செய்துள்ளார்.
காசியில் பிரம்மா பத்து அஸ்வமேத யாகம் நடத்திய இடம் இன்றும் "தச அஸ்வமேதா காட்" என்ற பெயரில் மிகவும் புனிதமான இடமாக விளங்குகிறது. ஆனால் இங்கு மதுரையிலோ நடந்தது ஒன்றோ,இரண்டோ அல்ல! மொத்தம் தொண்ணூற்றொன்பது அஸ்வமேத யாகங்கள் நிறைவடைந்திருந்தன. நூறு அஸ்வமேத யாகங்களை யார் செய்தாலும் அவருக்கு இந்திரப் பதவி என்பது விதி. இங்கோ மதுரையில் தொண்ணூற்றொன்பது அஸ்வமேத யாகங்கள் நிறைவடைந்திருந்த பட்சத்தில்,அது இந்திரனை உறுத்த, நேரடியாக மதுரை வந்த இந்திரன், மன்னர் மலையத்துவச பாண்டியனிடம் பிள்ளைப்பேறு வேண்டும் எனில் "புத்திர காமேஷ்டி யாகம்" நடத்த வேண்டும் என்று கூறினார்.
அகத்தியரும் அதை அனுமதிக்க நூறாவதாக புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. எனில், ஏன் அகத்தியர் இத்தனை அஸ்வமேத யாகங்களை செய்ய சொல்ல வேண்டும்? பிள்ளைபேற்றுக்கு புத்திர காமேஷ்டி யாகம் தான் செய்ய வேண்டும் என்பதை அறியாதவரா அவர்? அதுவரை யாருக்கும் அந்த காரணம் புரியவில்லை, அது புரியும் தருணமும் வந்தது. ஆம் ! இத்தனை வேள்விகளின் பயனாக நூறாவதாக நடந்த புத்திர காமேஷ்டி யாகம் பூர்ணாகுதியுடன் முடிவுற்ற போது யாகத்தீயானது வழக்கத்துக்கு மாறாக பெரும் பிரகாசத்துடன் மேலோங்கியது. உலகெங்கிலும் பல நல்ல அதிர்வுகள் தென்பட்டன.
அண்டங்கள் அனைத்தையும் ஈன்றவளான ஆதிபராசக்தி தன் மீது விளையாடப் போகிறாள் என்று பெருமிதம் கொண்டு ஆவலுடன் காத்திருந்தாள் பூமித்தாய். ஆகாயம் அவளை நித்தம் தரிசிக்க காத்திருந்தது, தென்றல் காற்றோ அவள் பாதங்களை வருடித் தழுவ பெருமகிழ்வு கொண்டு காத்திருந்தது, நீரானது அவள் மேனியை தழுவவும், பாதத்தை நனைக்கவும் காத்திருந்தது..இப்படியிருக்க பஞ்ச பூதங்களில் மற்ற நான்கும் பொறாமைப்படும் வகையில் வேள்வியின் அக்கினியில், அந்த தீயையே சுட்டெரிக்கும் சுடரொளியாக ஒரு பேரொளி தோன்ற அவ்வொளியிலிருந்து மூன்றே வயதான குழந்தையாக , பச்சை மரகத நிறத்தினளாக மெல்ல மழலை நடையுடன் வந்தது ஒரு பெண் குழந்தை.
எந்த ஆதிசக்தி,இக்கடம்பவனத்தில் ஆதிகாலத்தில் சக்தி பீடமாக தோன்றினாலோ, எந்த பாலையை தட்சனும், இமவானும் மகளாகப் பெற்று பெரும்பேறடைந்தனரோ அந்த வாலை மனோன்மணியே, மதுராபுரி நகரில் மலையத்துவசன் மற்றும் காஞ்சனமாலையின் மகளாக வந்தாள். பொதுவாக பெண் தெய்வங்கள் யாரும் தாயின் கருவிலிருந்து உதிப்பதில்லை. ஏனெனில் அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஈன்றெடுத்த ஆதிபராபரையை , அம்பிகையை தாங்கும் திறன் எந்த பெண்ணுக்கும் கிடையாது. எனவே கருவழியாக எந்த பெண் தெய்வமும் அவதரிப்பதில்லை
துளசி செடியின் கீழ் கண்டெடுக்கப்பட்டவளே ஆண்டாள் ; வள்ளிக்கிழங்கு செடியின் கீழ் கண்டெடுக்கப்பட்டவளே வள்ளி ; நிலத்தில் கண்டெடுக்கப்பட்டவளே சீதை, இப்படி மற்ற பெண் தெய்வங்கள் அவதரிக்க, அனைத்திலும் மேலான சிறப்பாக இவள் தோன்றியதோ அக்கினியில்! அதுவும் யாக வேள்வியில்! அதுவும் இவ்வுலகம் இதுவரை கண்டிராத ஒரே இடத்தில் தொண்ணூற்றொன்பது அஸ்வமேத யாகங்களும், ஒரு புத்திர காமேஷ்டி யாகம் என மொத்தம் நூறு யாகங்களின் வேள்வி தீயில் உதித்தாள்! மன்னனுக்கு தன் மனக்குறை நீங்கினாலும் அதிலும் ஒரு சிறு சஞ்சலம். ஏனெனில் அக்கினியில் உதித்து வந்த மூன்று வயது பெண் குழந்தைக்கு இயற்கைக்கு மாறான மூன்று தனங்கள் (மார்புகள்) இருந்தன. மேலும் அரசாள ஆண் குழந்தை வேண்டும் என்று ஏங்கிய மன்னனுக்கு கிடைத்ததோ பெண் குழந்தை.
எனவே இம்மாறுதல்களை கண்டு மதுரையில் உறையும் சுயம்பு லிங்கமான சொக்கலிங்கப் பெருமானிடம் முறையிட்டார் மலையத்துவச பாண்டிய மன்னர். உடனடியாக அனைவரும் அதிரும் படியாக அசரீரி கேட்டது. அதாவது தெய்வத்தின் குரல் மட்டும் அனைவருக்கும் கேட்கும். அதில், வந்துள்ளவள் தெய்வ குழந்தை என்றும், அவளுக்கு ஒரு ஆண் மகனுக்கு செய்யும் அனைத்தையும் செய்து ஆண் போலவே வளர்க்கவும்,அக்குழந்தையின் மூன்றாவது தனம், அவளின் மணாளனை சந்திக்கும் போது மறையும் என்றும் தடுக்க முடியாத பராக்ரம குணங்களை கொண்ட அவளுக்கு "தடாதகை" என்ற திருநாமத்தை சூட்டுமாறு அந்த அசரீரி சொன்னது.
மன்னனும், மக்களும் மகிழ்வுற்றனர். எத்தனையோ நாடுகள், எத்தனையோ தம்பதிகள் இருக்க அன்னை ஆதிபராசக்தி ஏன் மலையத்துவசன் மற்றும் காஞ்சனமாலையை தன் பெற்றோராக தேர்ந்தெடுக்க வேண்டும்?!
தொடர்ந்து அடுத்த பகுதியில் சிந்திப்போம் சிறப்பாக...
மீனாக்ஷீம்!!!