எக்காலத்திலும் இந்நகரம் அழியாது சிறப்பாய் திகழும்.. அன்னை தடாதகை - 4

Mar 27, 2026,03:06 PM IST

- நவீன் ஸ்ரீதர்.வி


கடந்த தொடரில் கடம்பவனத்தின் சிறப்புகளையும் சிவபெருமான் கடம்பவனத்தில் சுயம்பு லிங்கமாகவும், அம்பிகை சக்தி பீடமாக தோன்றியதையும், இந்திரனின் பாவம் தீர்த்தது பற்றியும் பார்த்தோம். தற்போது அந்த கடம்பவன சுயம்பு லிங்கம் வெளி உலகிற்கு வெளிப்பட்ட வரலாற்றை பற்றிப் பார்ப்போம்.


இந்திரனின் பாவம் கடம்பவனத்தில் தீர்ந்தது முதற்கொண்டு இந்திராதி தேவர்கள் அனைவரும் வணங்கும் புண்ணிய பூமியாக திகழ்ந்த கடம்பவனமும் , அவ்வனத்தே உதித்த சுயம்பு லிங்கமும் வெளிப்படும் காலம் வந்தது. இதற்கு காரணம் ஒரு வணிகர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! பாண்டிய பேரரசின்  தலைநகராக பல நூற்றாண்டுகள் ஒளிரப்போகும் இடம்; அண்டம் அனைத்தையும் ஈன்ற ஆதிபராசக்தி அவதரித்து அப்பனுடன் ஆட்சி செய்யப் போகும் புண்ணிய நகரம்;  திருமாலும் , பிரம்மனும் காணாத ஈசனின் அடியையும், முடியையும் காணப்போகும் மண்; சங்கம் வைத்து தமிழுக்கு சாகா வரம் தரவிருக்கும் செந்தமிழ் தலைநகரம் உருவாவதற்கு மூல காரணமாக திகழ்ந்தது ஒரு வணிகரே! 


அக்காலமானது, பாண்டியர்கள் ஆட்சி செய்த முதற்சங்கம் கண்ட தென்மதுரையும், இரண்டாம் சங்கம் கண்ட கபாடபுரமும் கடலுள் சென்றாலும், மீண்டும் மீன்கொடி தலைக்க பாண்டியர் குடிகள் துளிர்விட்ட காலம். தங்களின் செழிப்பான நிலங்கள் கடலுக்குள் சென்ற வருத்தம் இருப்பினும், இனி என்றும் தலைத்தோங்கி நிற்க கடவுளர் வந்து தங்கள் குடியில்  ஆட்சி செய்யப் போவதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. அக்காலத்தில் தற்போதைய மதுரை (அப்போதைய கடம்பவனம்) நகருக்கு கிழக்கே மணவூர் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி செய்த காலம். தனஞ்செயன் என்ற வணிகர் சோழ தேசம் சென்று வாணிபம் செய்து விட்டு பாண்டிய நாட்டின் தலைநகராம் மணவூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது கடம்பவனத்தை அடையும் வேளையில் மாலை நேரமாகிவிடுகிறது. 




கடம்பவனத்தை அடைந்தவுடன் இனம் புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் அவர் மனதில் பூக்கிறது.. தொடர்ந்து குளிர்ந்த காற்று வருட நேர்மறை அலைகளால் சூழப்பட்டு கடம்பவனத்தை விட்டு நீங்காது அங்கேயே இரவை கழிக்க அவர் மனம் திர்மானிக்கிறது. அப்படியாக அழகிய கடம்பவனத்தின் நடுவே, தான் நடந்து வந்த களைப்பை தீர்க்கத் தேனென தித்திக்கும் நீருள்ள தாமரைகள் பூத்துக்குலுங்கும் குளத்தை காண்கிறார். அதில்  நீர் பருகிய பின்னர், அக்குளத்துக்கு சற்று  தள்ளி உதிர்ந்த கடம்ப மலர்கள் மற்றும் இலைகளுக்கு மத்தியில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை காண்கிறார். 


சிவ பக்தரான தனஞ்செயன் மிகவும் மகிழ்வுற்று அச்சிவலிங்கத்தை வழிபட்டு, இருட்டியதும் சற்று தள்ளி ஒரு கடம்ப மரத்தின் அடியில் படுத்து உறங்குகிறார். நள்ளிரவும் ஆனது.  ஆனால் தனஞ்செயனால் தூங்க முடியாத படி கண் இமைகளை திறக்கச்செய்தது ஒளி, அது சித்திரை மாத பௌர்ணமி நிலவொளியா என்றால் ,அது இல்லை. விழித்த தனஞ்செயனின் பார்வை ஒளி வரும் திசையை நோக்கி நகர அது சுயம்பு லிங்கம் உள்ள இடத்தில் இருந்து வருவது தெரிந்து மெய்சிலிர்த்து ஒரு கடம்ப மரத்தின் பின் ஒளிந்து நின்று அங்கு நடப்பதை பார்க்கிறார். அச்சமயம் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் வந்து சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்திக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபடுவதை காண்கிறார். மெய் மறந்து நிற்கிறார். 


அன்று சித்திரை பௌர்ணமி நாள், தேவர்கள் அனைவரும் கடம்பவன லிங்கத்தை வழிபடும் நாள். வணிகர் தனஞ்செயன் தற்செயலாக கடம்பவனம் வழியே மணவூருக்கு செல்லும் போது, அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டதன் பலனாக அன்று தேவர்கள் வந்து ஈசனை பூஜிக்கும் அருட்காட்சி அவருக்கும் கிட்டியது.. விடிந்ததும் மிகவும் விரைந்து மணவூரை அடைந்து மன்னர் குலசேகர பாண்டியனை காண அரண்மனை அடைந்து, மன்னரிடம் தான் கண்ட காட்சியை கூறுகிறார் தனஞ்செயன். மெய்சிலிர்த்த மன்னன் மறுநாள் வணிகர் தனஞ்செயனுடன் சென்று அவ்விடத்தை காண திட்டமிடுகிறார். அன்று இரவு உறக்கத்தில் மன்னரின் கனவில்  தோன்றுகிறார் சிவபெருமான்.


நாளை அவர் காணப்போகும் கடம்பவனமே தான் விரும்பி உறையும் இடம் என்றும், அங்குள்ள சுயம்பு லிங்கத்துக்கு கோவில் எழுப்பி அதனை சுற்றி வனத்தை திருத்தி அழகிய நகராக்க கூறுகிறார் . மேலும் அந்நகருக்கான வடிவமைப்பையும் சிவபெருமான் கனவில் மன்னருக்கு உணர்த்துகிறார். மிகவும் மகிழ்ந்த மன்னன் மறுநாள் காலை வணிகர் தனஞ்செயனுடன் கடம்பவனத்தை அடைந்து அங்குள்ள சுயம்பு லிங்கத்தை வணங்கி , கடம்பவனத்தை அழகிய நகராக்கும் பணிகளை தொடங்குகிறார். அவ்வாறாக சிவபெருமான் உணர்த்தியதை போல் கோவிலும் அமைத்து, அதை சுற்றி அழகான நகரை நிர்மாணிக்கிறார் குலசேகர பாண்டியன். பின்னர் பாண்டிய நாட்டின் தலைநகரை மணவூரிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றுகிறார்.




சிவபெருமான் மிகவும் மகிழ்ந்து எக்காலத்திலும் இந்நகரம் அழியாது சிறப்பாய் திகழும் என்று ஆசிர்வதித்து "மதுரம்" எனப்படும் அமிர்தத்தை மழையாக நகரம் முழுவதும் பொழியச்செய்கிறார். மதுரமான அமிர்தத்தால் புனிதப்படுத்தப்பட்டதால் அந்நகரம் மதுராபுரி என்றும் மதுரை என்றும் பெயர் தாங்கி அன்று முதல் இன்று வரை திகழ்கிறது. அப்படியாக மதுரை நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதல் பாண்டிய மன்னன் என்ற பெருமையையும் பெறுகிறார் குலசேகர பாண்டியன்.


இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்தின் வடக்கு படித்துறையில் மதுரை நகரம் உருவாக காரணமான வணிகர் தனஞ்செயன் மற்றும் மன்னர் குலசேகர பாண்டியன் ஆகியோரது பழங்கால கற்சிலைகள் உள்ளதை காணலாம்‌. இப்புண்ணிய செயலுக்காக மேலும் ஒரு பெரும்பேற்றையும், காலம் கடந்தும் தன் புகழ் நிலைக்கப்போவதையும் மன்னர் அப்போது அறிந்திருக்கவில்லை...என்ன அது? 


தொடர்ந்து  சிந்திப்போம் சிறப்பாக....


மீனாக்ஷீம்!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!

news

traditional maavadu receipe பாட்டி ஸ்டைல் பாரம்பரிய மாவடு எப்படி போடுவது?

news

அயோத்தியின் நாயகனே .. அழகனே.. ஆன்மீக அழகனே ராமா!

news

மனிதனை மிஞ்சுமா இயந்திரம்? AGI மற்றும் அதற்கு அப்பால் .. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (8)

news

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

குழந்தை கிறுக்கிக் கொண்டே இருக்கிறது.. கவலை வேண்டாம்.. நீங்க என்ன சொல்றீங்க? புரியலையே?!

news

உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!

news

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு

news

எக்காலத்திலும் இந்நகரம் அழியாது சிறப்பாய் திகழும்.. அன்னை தடாதகை - 4

அதிகம் பார்க்கும் செய்திகள்